மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் ஆஜராகி உள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக கடந்த வியாழக்கிழமை விடுக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரமே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
கடந்த 2015 பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்ரசிறியின் தலைமையில் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்கள் சாட்சி விசாரணைகளை முன்னெடுத்த பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, தனது சாட்சி விசாரணைகளை கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டு வந்தது. எனினும் அவசியம் ஏற்படுமாயின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சாட்சியாளர்களை நேரடியாக விசாரணை செய்ய ஆணைக்குழுவுக்கு அழைப்பதாகவும் அன்றைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவர் நீதியரசர் கே.டி.சித்ரசிரி அறிவித்திருந்தார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலளிக்கவென கேள்விக் கொத்தொன்றினை ஆணைக் குழு அவரது அலுவலகத்துக்கு அனுப்பி வைத்ததுடன் , அவற்றுக்கு பதிலை சத்தியக் கடதாசியொன்றூடாக பிரதமர் ரணில் வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக் குழு உத்தரவிட்டிருந்தது. முதல் கேள்விக் கொத்துக்கான பதில் கிடைத்த பின்னர் மீளவும் கேள்விக் கொத்தொன்றை அனுப்பியுள்ளது. அதற்கான பதிலுடனேயே இன்று பிரதமர் ஆணைக் குழ்வில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் காலமானது டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டதை தொடர்ந்து மேலதிக சாட்சிப் பதிவுகள் ஆரம்பமாகின. அதன்படி பிணை முறி விசாரணை ஆணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் தப்புல டி லிவேரா பிரதமர் ரணிலை ஆணைக் குழுவுக்கு அழைத்து சாட்சிப் பதிவு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக ஆணைக் குழுவுக்கு அறிவித்திருந்தார். இந் நிலையிலேயே பிரதமர் ரணிலை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு அறிவித்தது.