வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல்?

540 0

வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.

வவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் 14 கடைகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. அந்த கடைத்தொகுதியில் அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து பள்ளிவாசல் ஊடாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் நகரசபை தீ அணைப்பு பிரிவினர், பொலிசாரின் உதவியுடன் தீப் பரம்பல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ பரப்பலின் காரணமாக இரு கடைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமடைந்துள்ளன.

குறித்த கடைப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்தே கடைகள் தீப்பித்து எரிந்ததாகவும் அப்பகுதியில் தங்கியிருந்தோர் கூறுவதுடன், தீப் பிடித்ததும் இருவர் தப்பியோடியதைக் கண்டதாகவும் வீதியில் பயணித்தோர் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்ட ரீதியில் இக் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், விசமிகளின் செயற்பாட்டால் வவுனியாவில் ஒற்றுமையாக வாழும் இனங்களுக்கு இடையில் வன்முறைகளை தூண்டும் வகையில் இச்செயற்பாடு அமைந்துள்ளதாக வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் வருகை தந்து நிலைமையை பார்வையிட்டதுடன் இது தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிசாரைக் கேட்டுக் கொண்டார்.

முறையான அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கடைளை அகற்றுமாறு கோரி அண்மையில் இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment