காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்ப 22 எம்.பி.க்களை நியமித்தது பாகிஸ்தான்

325 0

201608271821277162_Pakistan-names-22-MPs-to-rake-up-Kashmir-issue-at-UN_SECVPFகாஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்புவதற்காக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு தூதர்களாக பாகிஸ்தான் நியமித்துள்ளது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சனை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 8-ந்தேதி பயங்கரவாதி புர்கான் வானி இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இதையடுத்து அங்கு பல்வேறு வன்முறை போராட்டங்கள் அறங்கேறின. இந்த வன்முறையில் ஏறத்தாழ 70 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் இருந்து வருகின்றது.

காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானின் தொடர் அழைப்புகளை இந்தியா புறக்கணிப்பதுடன், காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்புவதாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது.

காஷ்மீரில் நடந்துவரும் வன்முறை கலவரங்களுக்கு பின்னால் பாகிஸ்தான் செயல்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். காஷ்மீரில் வன்முறை மற்றும் தீவிரவாதத்தை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் தொடர்ந்தால், அந்நாட்டில் உள்ள பலுசிஸ்தான் பிராந்தியத்தில் அரங்கேறும் மனித உரிமை மீறல்களை பற்றி இந்தியா உலகின் கவனத்திற்கு எடுத்து செல்லும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலடியாக, காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்ப 22 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு தூதர்களாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார். இவர்கள் காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் வன்முறை போராட்டங்கள் குறித்த தகவல்களை சேகரித்து சர்வதேச அரங்குகளில் முன்வைப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த சிறப்பு தூதர்கள் பாகிஸ்தான் மக்களின் வலிமையையும், எல்லைக்கோட்டுக்கு அப்பால் உள்ள காஷ்மீர் மக்களின் பிரார்த்தனையை பெற்றிருப்பதாக பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் ஐ.நா. சபையில் இதுவரை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.