வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை எந்த தனி நபருக்கும் எதிரானது அல்ல என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சசிகலா குடும்பத்தினர் மீது நடத்தப்படும் வருமான வரி சோதனையின் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இதற்கு அ.தி.மு.க. மட்டு மின்றி மேலும் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது பற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நாளை நம்மீதும் சோதனை நடத்தப்படுமோ என்ற பயம் தான். மடியில் கனம் இருப்பவர்கள், தனக்கும் நாளை வருமான வரித்துறையின் சோதனை வரலாம் என்ற அச்சம் கொண்டவர்கள், இருட்டறையில் தனி உலகம் படைத்து எதையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதவர்கள் விமர்சிப்பார்கள். அது பயத்தால் வெளிவரும் வார்த்தைகள்.
வருமானவரித்துறை என்பது தனி அதிகாரம் கொண்ட அமைப்பு. அது எங்கே, எப்போது சோதனை போடுவது என்பதை அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் முடிவு செய்யும்.
அப்போது ஏன் நடத்த வில்லை? இப்போது ஏன் நடத்துகிறார்கள்? என்று எப்படி கேள்வி எழுப்ப முடியும்?.
தகவல்களை சேகரிக்க, ஆதாரங்களை திரட்ட எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை எந்த தனி நபருக்கும் எதிரானது அல்ல. தமிழ்நாட்டுக்கு சாதகமானது.இவ்வாறு அவர் கூறினார்.