தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமையேற்று முதல்-அமைச்சர் நாற்காலியில் ஸ்டாலின் அமர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கோவை நடைபெற்ற இந்திரா காந்தி நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி பேசியதாவது:-
இப்போது நாட்டில் மோடி தலைமையில் மத்தியில் மதவாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவோம் என்று மோடி கூறினார். ஆனால் ஏழை மக்களின் சுருக்கு பையில் போட்ட பணத்தைதான் வங்கியில் போட வைத்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். மோடிக்கு எதிராக இப்போது அந்த கட்சியின் தலைவர்கள் திரும்பி இருக்கிறார்கள். அத்வானி பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவில் மோடியின் செல்வாக்கு குறைந்து வருகிறது. உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கூட, எதிர்காலத்தில் பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ். அறிவிக்க கூடும். அந்த அளவுக்கு மோடிக்கு மக்கள் மத்தியிலும், கட்சியிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குஜராத் தேர்தலில் மக்கள், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பளித்து திருப்புமுனையை ஏற்படுத்துவார்கள்.
தமிழ்நாட்டில் இப்போது முதுகெலும்பற்ற ஆட்சி நடக்கிறது. தமிழக அரசு கோமா நிலையில் செயலற்ற அரசாக இருக்கிறது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாய்மூடி மவுனிகளாக உள்ளனர். ஜெயலலிதா என்ற குலதெய்வம் குடியிருந்த வீடு என்று கூறிய அவர்கள், இந்த சோதனையை வாய்மூடி வேடிக்கை பார்ப்பதன் காரணம் என்ன?
வருமான வரிசோதனையில் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அந்த ரகசியங்களை கசிய விடுங்கள் என கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு திகழ்கிறது. எனவே மத்தியில் உள்ள மதவாத பாரதிய ஜனதா ஆட்சியையும், மாநிலத்தில் உள்ள ஊழல் ஆட்சியையும் தூக்கி எறிய கைகோர்ப்போம்.
மோடி திரும்பவும் வந்தால் தேசத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. கோவையில் பொதுக்கூட்டமாக நடைபெறும் இந்த தர்ம யுத்தம் மதசார்பற்ற கூட்டணிக்கு அடிக்கல் நாட்டுகின்ற நிகழ்ச்சியாக இருக்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார். தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமையேற்று முதல்-அமைச்சர் நாற்காலியில் ஸ்டாலின் அமர வேண்டும். இதற்காக காங்கிரஸ் தோளோடு தோள் நிற்கும்.
பிரதமர் மோடி கலைஞரை பார்க்காமல் சென்றிருந்தால் தான் தவறு. அவர் ஏற்கனவே ஒரு தவறு செய்துவிட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜெயலலிதா 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்த போது அவரை பார்க்க வராதது மோடி செய்த தவறு. எனவே மோடி, கலைஞரை பார்த்ததால் தமிழகத்தில் அதிசயம் எதுவும் நடக்காது. அவ்வாறு நினைத்தால் ஏமாற போவது மோடி தான். தமிழகத்தில் ஒரு நாளும் பா.ஜனதா காலூன்ற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.