புதிய அரசியலமைப்பினை முன்னெடுத்து செல்வதற்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் நேரடியாக நேற்று சபையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் வலியுறுத்தினார். எனவே, இதுதான் இறுதி சந்தர்ப்பமாகும். ஆகையால் கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ் மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், ஆணைக்குழுக்கள், திணைக்களங்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே எதிர்க்கட்சி ஒருவருக்கு கோப்குழு தலைமை பதவி வழங்கப்பட்டது. முன்னைய ஆட்சியின் போது அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்களே கோப்குழுவின் தலைமை பதவியை வகித்தனர். எனினும் நல்லாட்சியில் எதிர்க்கட்சி சார்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியை நியமித்தோம். எனினும் நான் அவரை பாராட்டுகின்றேன். அவர் தனது காரியங்களை உரிய முறையில் செய்துள்ளார். அதனை பாராட்ட வேண்டும்.
அத்துடன் தற்போது ஆணைக்குழுக்கள் சுயாதீனமில்லை என்று கூற முடியாது. ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தின் ஊடாக அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் பெற்றுக்கொண்டார்.
அதேபோன்று தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக பாராளுமன்றத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கண்காணிப்பு குழுக்களை நியமித்தோம். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரின் காலத்தில் பாராளுமன்ற கண்காணிப்பு குழுக்களில் ஆளும் கட்சியினரே இருந்தனர். எனினும் நாம் எதிர்க்கட்சியினரை நியமித்தோம். இதன்படி அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்புகளை வழங்கியுள்ளோம். ஜனாதிபதியின் அதிகாரங்கள் பல பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மக்கள் ஆணையில்லை என்று எவருக்கும் கூற முடியாது.ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் மேடைகளில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே கூறியது. அதற்கே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
மேலும் மனித உரிமை தொடர்பில் சர்வதேச அளவில் நாம் அடிமைப்பட்டு இருந்தோம். எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது மீண்டும் சர்வதேச ஆதரவினை அதிகரித்துள்ளோம். சர்வதேச ஆதரவு இருக்கும் போதே தேசிய பிரச்சினையை தீர்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் மஹிந்த ராஜபக் ஷவிடம் பகிரங்க கோரிக்கை விடுத்தார். யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் மஹிந்த ராஜபக் ஷவே முதலில் அதிகாரபரவலாக்கம் பற்றி கூறினார். இந்தியாவுக்கு சென்று உறுதியளித்தார். தெரிவுக் குழு நியமித்தார். எனினும் அப்போது தமிழ் தலைவர்கள் அவருக்கு ஆதரவு வழங்கவில்லை. எனினும் தெரிவுக் குழு
வினை நியமித்திருந்தால் நாம் ஆதரவு வழங்கியிருப்போம். மஹிந்தவே முதலில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட் டத்தின் அதிகாரம் குறைவு என கூறினார். எனவே சம்பந்தனின் கோரிக்கைக்கு அமையகூட்டு எதிரணி ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என்றார்.