உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுக்கப்படவுள்ளதுடன் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் வரையில் வேட்பு மனுக்களை பொறுப்பேற்பதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் இது தொடர்பான கூட்டம் நேற்று காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 வரையில்
தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது. அதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். . அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
சுயாதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நேற்றைய கூட்டம் நிறைவடைந்த பின்னர் தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுயாதீன தேர்ததல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். எனினும் வேட்புமனுக்கோரும் அறிவித்தலை எதிர்வரும் 27 ஆம் திகதி விடுப்பதற்கு சுயாதீன் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (நேற்று) தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க அவ்வறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்கள் கடந்த பின்னர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் காலம் ஆரம்பமாவதுடன், குறித்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து 17 ஆவது நாளுக்கு அடுத்த நாள் நண்பகலுடன் அக்காலக்கெடு நிறைவடையவுள்ளது.
எனவே அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரி அல்லது அவ்வவ்மன்றங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளான மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் குறித்த வேட்புமனுத்தாக்கல் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. ஆகவே அதிகாரிகளை அடையாளப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (நேற்று) வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக்க கொண்டு தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
எனினும் அதற்கான பணிகள் நிறைவுசெய்யப்பட்டதுடன் கடந்த முதலாம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா கைச்சாத்திட்டு அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்தார். எனினும் அவ்வர்த்தமானி கடந்த 11 ஆம் திகதியே வெளியிடப்பட்டது.
ஆகவே வெளியிடப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்த வர்த்மானியில் நான்காயிரத்து எண்ணூற்று நாற்பது தொகுதிகள் வகுக்கப்பட்டுள்ளதுடன் 341 உள்ளூராட்சிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வுள்ளூராட்சி மன்றங்களுக்கு எண்ணாயிரத்து முன்னூற்று ஐம்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இதேவேளை இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் முன்னூற்று முப்பத்தைந்து உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஆகவே புதிய கலப்பு தேர்தல் முறையூடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட ஆறு உள்ளூராட்சி மன்றங்கள் மேலதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க அகரபதன, கொட்டகல, மஸ்கெலிய, நோர்வூட், பொலநறுவை ஆகிய பிரதேச சபைளும் பொலநறுவை மாநாகர சபையுமே புதிய உள்ளூராட்சி மன்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது நாட்டில் மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு நகர சபைகளும் உள்ளன.
தேர்தல் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்பட வேண்டிய உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்களின் எண்ணிக்கை உள்ளடங்கலான பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்து அதனை வர்த்தமானி மூலம் அறிவித்தால் அதற்குப் பின்னரான பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குச் செல்கிறது.
அதற்கிணங்கவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நேற்று கூடி ஆராய்ந்ததுடன் வேட்புமனுத்தாக்கல் செய்யும் திகதியையும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உள்ளூராட்சிமன்றங்களுக்கான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறுகோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த வழக்கை விசாரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.