இரணைமடு புத்த விகாரை சிங்களக் குடியேற்றத்திற்கான திட்டம்!

354 0

militarisation_CIகிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி இராணுவ அதிகாரி ஒருவர், இதுவே தமிழ் – சிங்கள மக்களிடையே பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும் விளைவை கொண்டது என்று தாம் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார்.

கிளிநொச்சியின் இரணைமடு மற்றும் முறிகண்டியை அண்டிய பகுதியில் திட்டமிட்ட குடியேற்றம் ஒன்றை அமைக்கும் நோக்கத்திற்கான விதைகளை பரப்பும் முயற்சியை முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் மேற்கொண்டதாகவும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையே தொடர்ச்சியாக இடம்பெறுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அதாவது, முறிகண்டிக்கும் கொக்காவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் மகிந்த அரசாங்கத்தின் சிந்தனையின்படி பாரிய ஐந்து வீதிகள் காடுகளுக்குள் ஊடுருவும் படி அமைக்க உத்தரவிடப்பட்டது.

பாரிய இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டு இராணுவ குடியேற்றம் அமைக்கவும் திட்டம் தீட்டப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வீதிகள் தற்போது அமைக்கப்படும் புத்த விகாரையை வந்தடையும் விதமாக  அமைவதை அவதானித்தால் இதனை புரிந்துகொள்ள முடியும் என்றும் கூறுகிறார்.

கிளிநொச்சி மற்றும் வடக்கின் மையப்பகுதியில் இத்தகைய குடியேற்றத்தை அமைக்க முன்னைய அரசு திட்டமிட்டதாக கூறும் அந்த அதிகாரி தற்போது அமைக்கப்படும் புத்தவிகாரை சிங்களக் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் முகமாகவே அமைக்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.

குறித்த ஐந்து வீதிகளும் தமிழ் மக்களின் பார்வைக்கு தெரியாத விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

அத்துடன் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 99 அடி உயரத்தில் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டபோதே குறித்த விகாரையை அமைக்கும் நடவடிக்கையை இராணுவம் தொடங்கியதாகவும் இதற்கு சில இராணுவ மேலதிகாரிகளின் உத்தரவே காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

முன்னைய ஆட்சியின் திட்டமிடலான புத்தவிகாரை  முன்னைய அட்சியின் இராணுவ விசுவாசிகளால் தற்போது முன்னெடுக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதை தான் விரும்பவில்லை என்ற அடிப்படையிலேயே இத் தகவலை கூறுவதாகவும் இத்தகைய செயல்கள் தமிழ் மக்களை இராணுவத்தை நோக்கியும் அரசை நோக்கியும் பாரிய அளவில் பகைமை கொள்ளச் செய்யும் வெறுப்புணர்வை தூண்டும் நடவடிக்கையாகவே அமையும் என்றே தான் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார்.

வடக்கில் உள்ள தமிழ் மக்களின் வழிபாட்டுடன் தொடர்புடைய பிரசித்தமான கோயில் ஒன்றில் இப்படி புத்த விகாரையை அமைப்பது அவர்களை கடுமையாக சீண்டும் நடவடிக்கை என்று கூறும் அவர், இதனை புத்த பெருமான் ஒருபோதும் ஏற்கார் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தமிழ் மக்கள் இப்போதுள்ள அரசியல் சூழலில் ஜனநாயக வழியில் போராடி நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட விரும்புவதாகவும் அந்த இராணுவ அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.