போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு போஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சசிகலா குடும்பத்தினரிடம் கடந்த 6 நாட்களாக வருமான வரி சோதனையும் அதை தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தினர்.
ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.
போயஸ் கார்டனில் சோதனை நடைபெறும் தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
அவர்கள், ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.அப்போது வருமான வரித்துறை, மத்திய அரசு மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.இது தொடர்பாக 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இருவரது வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு உண்டு. தற்போது கூடுதலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிரீன்வேஸ் சாலையில் இருந்து உள்ளே செல்பவர்களை தீவிரமாக விசாரித்த பிறகே போலீசார் அனுமதிக்கிறார்கள்.