தமிழகத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் அதனை அழிக்க முயல்கிறார்கள் என தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க. அம்மா அணியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் 2 கோடி தொண்டர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.
போயஸ்கார்டனில் சோதனை நடத்தியது குறித்து முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ் மவுனம் சாதிக்கின்றனர். இதுபற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை. தமிழக அரசு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் 37 எம்.பி. சீட்களை ஜெயித்தது ஜெயலலிதாவின் தகுதி. அது அவரின் செல்வாக்கு.
இந்த வளர்ச்சியை பொறுக்காதவர்கள் தமிழகத்தில் அ.தி.மு.க.வை அழிக்க முயல்கிறார்கள். இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் திரும்பி உள்ளார்கள். போயஸ் கார்டன் எங்களை பொறுத்தவரை கோவில் தான். அங்கு ஜெயலலிதாவின் பார்வைக்காக ஏங்கிய காலம் உண்டு.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவரது கார் டயரை தொட்டு கும்பிட்டவர்கள் தான் தற்போதைய ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். ஆகியோர். போயஸ்கார்டனில் நடந்த சோதனை குறித்து பேச இவர்கள் பயப்படுகிறார்கள். சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டில் இவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதால் இவர்கள் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்கள். வரம்பு மீறி ஜெயலலிதாவின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.