போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்தவே வருமான வரி சோதனை: அன்வர் ராஜா எம்.பி

336 0

சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்த வருமான வரித்துறை சோதனை உதவியாக இருக்கும் என அன்வர் ராஜா எம்.பி. கூறினார்.

சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பினாமி சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. வருமான சோதனையில் சிக்கியவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் நடைபெறுகிறது.

இந்த விசாரணையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கி உள்ளனர். நேற்று அதிரடியாக போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தினர் இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த அன்வர் ராஜா எம்.பி., போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

‘ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை சுத்தப்படுத்த வருமான வரித்துறை சோதனை உதவியாக இருக்கும். இந்த சோதனையால் களங்கம் ஏற்படவில்லை, களங்கம் துடைக்கப்படும். போயஸ் கார்டன் இல்லத்தில் ஆவணங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற தகவல் காரணமாக சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனைக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளதா? என்பது பின்னர்தான்  தெரியவரும்’ என்றார் அன்வர் ராஜா.

இதற்கிடையே, போயஸ் கார்டனில் ஆதாரத்தின்  அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a comment