யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலங்களில் பரவலாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கு எதிராக கொடுக்கப்படும் அச்சுறுத்தலா? என சிந்திக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவு கூறல் நிகழ்வுக்கும் வாள்வெட்டு சம்பவங்களுக்கு பின்னணி இருப்பதாக தாம் எண்ணுவதாக வட மாகாண சபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாண கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்ற போது நான் அந்த வழியாக சென்றிருந்தேன்.
மக்கள் அங்கு மிகுந்த அச்ச உணர்வுடன் நின்றிருப்பதை நான் நேரடியாக பார்க்க நேர்ந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் வாள்வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருந்தார்கள்.
அதில் உண்மையும் இருந்தது. ஆனால் இப்போது சடுதியாக வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது. இது யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.