உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளிலும் காணக்கிடைக்காத ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சமூகம் இலங்கையில் காணப்படுவதற்கு பௌத்த மத கோட்பாடுகளினால் எமது சமூகம் போஷிக்கப்பட்டிருப்பதே காரணமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, புத்தசாசனத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதெனவும் தெரிவித்தார்.
மாவனெல்ல, கெப்பட்டிபொல ஸ்ரீ அபய ராஜ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் புண்ணிய நிகழ்வில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவமுடைய மாவனெல்ல, கெப்பட்டிபொல ஸ்ரீ அபய ராஜ மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் விகாராதிபதி வண. மண்டாவல தம்மாராம நாயக்க தேரரை தரிசித்து நலம் விசாரித்தார்.
மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வின் பின்னர், இப்புண்ணிய நிகழ்வினை நினைவுகூரும் முகமாக மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி நாட்டினார்.
விகாரைக்கான புதிய சூரியப்படல் தொகுதியும் இதன்போது ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம சங்க சபையின் மகா நாயக்கர் வண. இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரும் பொலன்னறுவை ஷியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வண. வெடருவே உபாலி நாயக்க தேரரும் நிகழ்வில் சமய அனுஷ்டானங்களை நிகழ்த்தினர்.