ஆயுத மௌனிப்பின் பின்னரான காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வாள் வெட்டுக் குழுக்களின் பின்னணி குறித்து ஆராய வேண்டும் என்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ளுர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையத் திறப்புவிழாவின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுக் கலாச்சாரம் என்பது இப்போது தோற்றுவிக்கப்பட்ட ஒரு புதிய நிலைமை. ஆனால் எங்களுடைய இளைஞர்கள் வன்முறைக் கலாச்சாரத்திற்குள் பின்னிப் பிணைந்தவர்கள் அல்ல. அதனால்தான் இந்தப் பின்னணி குறித்து ஆராய வேண்டியதொரு தேவை எழுந்திருக்கின்றது.
என்னைப் பொறுத்தமட்டில் யாழ்ப்பாணத்தில் காவல்துறையினருடைய சட்டம் ஒழுங்கு மேற்பார்வை ஒழுங்காக நடைமுறையில் இல்லை. இதன் பின்னணியில் இவ்வாறான ஒரு மோசமான ஆயுதக் கலாச்சாரத்தில் இளைஞர்கள் இருப்பதைப் பாவித்துக்கொண்டு வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற இராணுவத்தினரை தக்கவைப்பதற்கான செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.
இவ்வாறான ஒரு மோசமான சமூகச் சூழல் இருக்கின்ற நிலையில் நாங்கள் இராணுவத்தை தொடர்ந்தும் இந்த மண்ணில் வைத்திருக்க வேண்டும் என்ற பேச்சை இப்பொழுது ஆரம்பித்திருக்கின்றார்கள்.
எங்களுடைய இளைஞர்கள் இவ்வாறானதொரு மோசமான கலாச்சாரத்தினை கொண்டவர்கள் அல்ல. அந்த அடிப்படையில்தான் இந்த வன்முறைச் சூழலின் பின்னணி குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது என்று கூறுகின்றேன்.
இவ்வாறான வன்முறைக் கலாச்சாரத்திற்குள் கட்டுண்டுள்ள எமது சில இளைஞர்கள் தமது ஆற்றல்களை ஆக்கபூர்வமான வகையில் வெளிப்படுத்துவதன் ஊடாக எமது சமூகத்தில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். வாள்வெட்டு குழுக்களாக செயற்படும் எமது இளைஞர்கள் நல்லதொரு சமூக மாற்றத்திற்கு தம்மை உட்படுத்த தயாராக வேண்டும்.
வடக்கு மாகாண சபைக்கு கட்டுப்படாது மத்திய அரசின் கைப்பிடிக்குள் இருந்து செயற்பட்டுவரும் காவல்துறையின் செயற்படாத்தன்மையே இவையனைத்திற்கும் காரணம். சாதாரண வன்முறைச் சம்பவம் இடம்பெறும் வேளையில் கூட காவல்துறையினரை அழைத்து நீதியான விசாரணையைச் செய்ய முடியாத நிலையில்தான் வடக்கு மாகாண சபையின் அதிகாரம் இருக்கின்றது.
எனவே காணி மற்றும் காவல்துறை அதிகாரம் இல்லாத இடத்தில் சட்டம் ஒழுங்கை பேண வேண்டியது காவல்துறையினரது கடமையாகும். காவல்துறையினரின் செயற்பாடானது பாரபட்சமின்றி இருப்பது மிக மிக அவசியமாகும். நாங்கள் இவ்வாறு கூறிவிட்டோம் என்பதற்காகவே அப்பாவி தமிழ் இளைஞர்களது வீட்டிலோ அல்லது அவர்கள் தொடர்புடைய இடங்களில் கைக்குண்டுகளையோ அல்லது வேறு ஆயுதங்களையோ தாமே கொண்டுபோய் வைத்துவிட்டு அதன் அடிப்படையில் அவ்விளைஞர்களை கைதுசெய்யும் நிலைமையை மாற்ற வேண்டும். இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளின் பின்னணியில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பற்ற இளைஞர்களை கைது செய்து துன்புறுத்தும் அத்துமீறல்களையும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகள் குறித்தான கேள்விக்கு பதிலளிக்கையில்…
வடக்கு மாகாணத்தில் மகளிர் விவகாரம் புனர்வாழ்வு அமைச்சர் என்ற பெயரைத் தாங்கி நின்றாலும் அதற்கான ஆளணி மற்றும் நிதி என்பன இல்லாத நிலையே காணப்படுகின்றது. வெவ்வேறு திணைக்களங்களின் கீழான நிதிகளைக் கொண்டே பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இன்றுவரை போரினால் ஒட்டுமொத்தமாக பாhதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் விசேட கவனம் செலுத்த வேண்டிய பெண்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் ஒன்பது மாகாணங்களையும் ஓரே மாதிரியான கவனத்தைக் கொண்டு பார்க்கின்ற காரணத்தினால் பாதிக்கப்பட்ட எங்களுடைய பெண்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான வேலைத்திட்டங்களை வடக்கு மாகாண சபையினால் செய்ய முடியாதுள்ளது.
எத்தனையோ சந்தர்ப்பங்களில் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்தியிருந்த போதிலும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதுடன் அதற்கான ஆளணியையோ நிதியையோ இதுவரை தரவில்லை. அதனால்தான் எனது அமைச்சிற்குசிய கடமைகளை செய்யமுடியாதுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் எம்மீது திணிக்கப்பட்ட யுத்தம் காரணமாகவே இன்றைய மோசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். இதற்கு காரணகர்த்தாவாக இருக்கும் இந்த அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு விசேட கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையில் இருபத்து மூன்று லட்சம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்…
இலங்கை மக்கள் தொகையில் 52 சதவிகிதமானோர் பெண்களாக இருக்கும் நிலையில் அவர்களில் இருபத்து மூன்று லட்சம் பெண்களுக்கு புற்றுநோய் இருப்பதானது சாதாரண விடயமல்ல. இதற்கு எதிராக இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சர், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரமர் ஆகியோரே பதிலளிக்க வேண்டுமென அமைச்சர் பதிலளித்திருந்தார்.