ஒபாமா பவுண்டேஷன் செயல்பாடுகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய ஒபாமா வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் டிச. 1-ந்தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி முதல் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை பதவி வகித்தவர் பராக் ஒபாமா.தற்போது 56 வயதாகும் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சமூக நல பணிகளை செய்து வருகிறார்.
உலகம் முழுவதும் உள்ள திறமைசாலிகள், புதுமை விரும்பிகள், ஏழைகளுக்கு உதவும் வகையில் செயல்படுவதற்காக அவர் சமீபத்தில் ‘‘ஒபாமா பவுண்டேஷன்’’ எனும் அமைப்பை தொடங்கியுள்ளார். கடந்த மாதம் அக்டோபர் 31-ந்தேதி அவர் சிகாகோவில் தனது பவுண்டேஷனை முறைப்படி தொடங்கினார்.
இந்த பவுண்டேஷன் செயல்பாடுகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் இந்தியாவுக்கும் வர உள்ளார்.
அவரது இந்திய பயணத் திட்டம் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. என்றாலும் ஒபாமா அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒபாமா பவுண்டேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார். பிறகு அவர் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
ஒபாமா கடைசியாக 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வந்தார். 3 நாட்கள் அவர் இந்தியாவில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 33 மாதத்துக்கு பிறகு அவர் மீண்டும் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.இந்திய பயணம் முடிந்ததும், இந்தோனேசியா, ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார்.