கோவையில் இன்று காலை காணப்பட்ட கடும் பனிமூட்டத்தால் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
கோவையில் கடந்த 3 நாட்களாக பனிமூட்டம் காணப்படுகிறது.இன்று அதிகாலை பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. கட்டிடங்களை மறைக்கும் அளவுக்கு பனி மூட்டம் இருந்தது.இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
பீளமேடு விமான நிலைய பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. காலை 7.30 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு வரும் இண்டிகோ விமானம் வழக்கம் போல வந்தது.
ஆனால் பனி மூட்டம் காரணமாக ஓடுதள பாதை சரியாக தெரியாததால் விமானம் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
காலை 9 மணிக்கு பிறகே பனிமூட்டம் குறைந்து சகஜ நிலைக்கு வந்தது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்ததையடுத்து மீண்டும் சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு கோவை வந்தது.சுமார் 2½ மணி நேரத்துக்கு மேலாக விமானம் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.