மின் மீட்டர் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை: அமைச்சர் தங்கமணி

264 0

மின் மீட்டர் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை என மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனை ஏற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 17-ந் தேதியான இன்று முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.

அதன்படி மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு -மேற்கு கால்வாய் பாசனத்துக்காக இன்று காலை 9.30 மணி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மது விலக்கு மற்றும் மின்சாரதுறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சுற்றச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் மதகினை திருகி தண்ணீரை திறந்து வைத்தனர். பின்னர் கால்வாயில் சீறி பாய்ந்து சென்ற தண்ணீரை அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்று காவிரி அன்னையை வாழ்த்தி வணங்கினார்கள்.

இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது-

தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்காக இன்று காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் தொடர்ந்து 13 நாட்களுக்கு திறந்து விடப்படும். பின்னர் 13 நாட்கள் இடைவெளியே விட்டு விட்டு, அதன் பிறகு 13 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் அளிக்கப்படும். இதை போல் 13 நாட்கள் என 4 முறை மொத்தம் 52 நாட்கள் பாசனத்துக்காக தண்ணீர் அளிக்கப்படும்.மின் மீட்டர் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசின் மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றம் சாட்டி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி, எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம், பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, பி.மனோன்மணி, வெற்றிவேல், ஏ.பி.சக்திவேல், ஆர்.எம். சின்னதம்பி, மேட்டூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் லலிதா சரவணன், துணை தலைவர் ராமகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ், மேட்டூர் பொதுப்பணித்துறையின் நிர்வாக பொறியாளர் சுப்பிரமணி, உதவி நிர்வாக பொறியாளர்கள் வசந்தன், தேவராஜ், உதவி பொறியாளர்கள் மதுசூதனன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ள இந்த தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 1711 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 7 ஆயிரம் கன அடி தண்ணீர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 83.51 அடியாக இருந்தது.

Leave a comment