எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீண்டும் 10 நாகை மீனவர்கள் கைது

254 0

நடுக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலஙகை கடற்படையினர் ஒரு படகில் ரோந்து வந்தனர்.

உடனே படகில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களின் படகை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர். பின்னர் கைதான 10 பேரையும் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரி நேற்று அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் நடுக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசை படகில் கடந்த 15-ந் தேதி 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகை சுற்றிவளைத்து அவர்களை பிடித்தனர். மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 10 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

அடுத்தடுத்து 2 நாட்களில் நாகையை சேர்ந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment