யுத்தம் முடிவடைந்தாலும் தமிழர் தாயகத்தில் யுத்தகால சூழல் தொடர்கிறது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

708 0

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்தம் முடிவடைந்தாலும் யுத்தகால சூழல் இன்றும் தொடர்வதாக வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள், வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றை நேற்று புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரதான பாலத்தடி பெரியகடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்…
யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்த பிற்பாடும் மன்னார் நகரப்பகுதியைப் பார்க்கின்ற பொழுது இப்பொழுதும் யுத்தத்திற்குள் இருக்கின்றதான சூழலைப் போன்றே காணப்படுகின்றது. நகர அபிவிருத்தி என்பது மன்னார் மாவட்ட மக்களைப் பொறுத்தவரையில் இன்னும் பல வருடங்கள் செல்லலாம்.

திட்டமிடப்பட்ட வகையில் யுத்தத்தை நடத்திவிட்டு தொடர்ந்தும் யுத்த சூழலில் இருப்பதான ஒரு நிலையை தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தியே இந்த அரசு சென்றுகொண்டிருக்கின்றது. ஏ-9 வீதியால் செல்லும் போது கிளிநொச்சி பகுதியை பார்த்தோமேயானால் மிகவும் அபிவிருத்தியை கண்ட இடமாக காட்சியளிக்கிறது. ஆனால் கிராமங்களுக்குள் இறங்குகின்ற போது வீதிகளில் இருந்து மக்களுடைய வாழ்வாதாரம் என எல்லாமே பூச்சியமான நிலையில்தான் இருக்கின்றது.

கிராமங்களில் இருந்து அபிவிருத்தியை கொண்டு வருவதன் மூலம்தான் நல்லதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்தவகையில் சந்தைப்படுத்தலுக்காக இந்த புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருப்பது மக்களுடைய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான அரிய சந்தர்ப்பமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

வடமாகாணத்திற்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் தொழில்துறை தொடர்பான பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்காமை பெரும் பின்னடைவாக உள்ளது.

இம்முறை வரவு-செலவு திட்டத்தை பார்த்தோமேயானல் கவர்ச்சிகரமான திட்டங்களாக போடப்பட்டிருக்கிறது. ஆனால் இதை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றது என்றால் மத்திய அரசு நேரடியாகவே தான் நடைமுறைப் படுத்தப்போகின்றது.

வடக்கு மாகாண சபையை புறந்தள்ளி ஏற்கனவே அவர்கள் திட்டமிட்ட பல கோடி ரூபா பெறுமதியான திட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாமல் மூடப்பட்ட நிலையினை வட மாகாணம் முழுவதும் பார்க்கின்றோம். பல அரிசி ஆலைகள், உயிர் உரம் தயாரிக்கும் திட்டங்கள் எல்லாமே பல கோடிக்கணக்கில் இலங்கை அரசாங்கத்தினால் நேரடியாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு கைவிடப்பட்ட திட்டங்களாகும்.

வடக்கு மாகாண சபையால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் எங்களுடைய நேரடிக் கண்காணிப்பில் அல்லது எங்களுடைய அதிகாரிகளின் மேற்பார்வையில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே கவர்ச்சிகரமாக சர்வதேசத்தை ஏமாற்றுகின்ற விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கின் இந்த வரவு-செலவு திட்டமானது வடக்கு மாகாணத்தை திட்டமிட்ட வகையில் புறந்தள்ளி தாங்களே நேரடியாக இந்த அபிவிருத்தியை செய்வதானது நயவஞ்சகமான செயற்பாடாகும்.

எமது மக்கள் மத்தியில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி ஓரங்கட்டும் செயற்பாடாகவே நாங்கள் இதனைப்பார்க்கின்றோம். இன்னும் தென்னிலங்கையை சார்ந்துதான் நாங்கள் இருக்கின்றோம். எங்களுடைய வருமானம் அல்லது தேவைகள் எல்லாவற்றிற்கும் தென்னிலங்கையை நாடிநிற்கும் நிலைதான் உள்ளது.
எங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. எங்களுக்கென்று சுய பொருளாதாரத்தையும் சுய சந்தைகளை உருவாக்குவதன் ஊடாகத்தான் இவ்வாறான அரசினுடைய காலைப்பிடிக்காமல் நாங்கள் நாங்களாகவே இருக்கக் கூடியதான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என்று நம்புகின்றோம்.

அந்தவகையில்தான் நாங்கள் கிராமங்கள் தோறும் கிராமப்பொருளாதாரத்தை பல வழிவகைகளில் சிறிய சிறிய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாது உற்பத்திப் பொருட்களை உருவாக்கி சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்து மக்களை தங்களுடைய கால்களில் தன்னம்பிக்கையுடன் வாழச்செய்வதற்கான முயற்களில் ஈடுபட்டிருக்கின்றோம்.

தொடர்ந்தும் எங்களுடைய வடக்கு மாகாணத்தை சகல வழிகளிலும் மேம்படுத்த முயன்று வருகின்றோம். அதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பு அவசியமாகும். உங்கள் உங்கள் கிராமங்கள் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களையும் ஆலோசனைகளையும் நீங்கள் தெரிவிக்கும் போது அதனை பரிசீலித்து நடைமுறைப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் யுத்தம் காராணமாக பல இழப்புகள் வந்திருந்த நிலையில் இன்று தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பலர் சமூக விரோதிகளாக மாறிக்கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

   

Leave a comment