பச்சிலைப்பள்ளி முகமாலை மற்றும் இந்திராபுரத்தின் 200 மீற்றர் பிரதேசம் மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பரமோதயன் ஜெயராணி தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மிதிவெடி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக முகமாலைப் பிரதேசம் காணப்படுகின்றது. இருப்பினும் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தினர் தொடர்ச்சியாக துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அதனை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் முகமாலை மற்றும் இந்திராபுரத்திற்கு உட்பட்ட ஏ 9 சாலையில் இருந்து 200 மீற்றர் தூரத்திற்கு மக்களை மீள்குடி யேற்றம் செய்ய மிதிவெடி அகற்றும் பிரிவினர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அத்தோடு முகமாலைப் பகுதியில் காணப்படுகின்ற வைரவர் ஆலயத்தின் பகுதியையும் விடுவிக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது:
குறித்த கிராமத்தில் ஒரு பகுதி கடந்த வருடத்தில் விடுவிக்கப்பட்டு அங்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு பகுதி எங்களுக்கு விடு விக்கப்பட்டுள்ளது.அங்கு குடியேறுபவர்கள் தொடர்பாக விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
அனைவருக்கும் அங்கு வெடிபொருள்கள் காணப்படுவது தெரியும், இருப்பினும் நாங்கள் தொடர்ச்சியாக மிதிவெடி அகற்றுபவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். முன்னரிமை அடிப்படையில் இந்திரா புரத்தினை வழங்கியுள்ளோம். அடுத்த வருடத்தில் அங்கு மீள்குடி யேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் கிடைக்கும் என நம்புகின்றோம். என்றார்.