ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை 37 ஆண்டுகளாக அதிபராக இருந்துவரும் ராபர்ட் முகாபேக்கு 93 வயதாகிவிட்டது.
இதனையடுத்து அவரைவிட 41 வயது இளையவரான அவர் மனைவி கிரேஸ் ஆட்சியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர்கள், அதிகாரிகள் பதவியை விட்டு நீக்கப்பட்டனர். இதனால் உள்நாட்டுக் கலவரங்கள் வெடித்தன.
இந்நிலையில் நேற்று உள்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவ ஜெனரல் எஸ்.பி.மேயோ, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது என்று கூறினார்.
அத்துடன் முகாபே மற்றும் அவர் குடும்பத்தினர் பாதுகாப்பாக வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் கிரிமினல்களை வேட்டையாட ராணுவ வீரர்கள் வீதிகளில் சண்டையிட்டு வருவதாகவும் அறிவித்தார்.
இதனிடையே ஐநா சபையின் பொதுச்செயலாளர் ஜெனரல் அந்தோனியோ குயுட்டெரஸ், ஆப்பிரிக்க யூனியன் மற்றும் மேற்கத்திய நாடுகள் தலையிட்டு அங்கு அமைதி நீடிக்கச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.