ஆனைக்கோட்டை வாள்வெட்டு: மூன்று இளைஞர்கள் இன்று அதிகாலை கைது!நேற்றுக் கைதாகிய மூவரில் இருவர் விடுவிப்பு
ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியதுடன், அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இன்று அதிகாலை இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினார்.
“வாள்களுடன் நடமாடிய குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நல்லூர், கோவில் வீதியைச் சேர்ந்த ஞானசேகரம் விஜித்பாரத் (வயது – 21) என்ற இளைஞனைத் தவிர ஏனைய இருவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் நல்லூரைச் சேர்ந்த வரதராஜன் இந்திரஜித் (வயது – 21), கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த தவராஜா நிக்ஸன் (வயது – 20), உடும்பிராயைச் சேர்ந்த அன்பழகன் சாருக்ஸன் (வயது – 21) ஆகிய 3 இளைஞர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நால்வரும்தான் ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியதுடன், அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்தினர். இவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி குலசிங்கம் குலபிரதீபன் ( வயது 35 )என்பவர் படுகாயமடைந்தார்.
சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின் இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.