வழக்குகளை விரைவாக முடிப்பதைக் கண்காணிக்க விசேட சபை

518 0

நிதி மோசடி உள்ளிட்ட சட்ட ஒழுங்கு முறைகேடுகளை ஆராயும் அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிப்பதற்காக ‘வளர்ச்சி அளவீட்டுச் சபை’ ஒன்றை நிறுவ ஐ.தே.க. செயற்குழு நேற்று (15) தீர்மானித்துள்ளது.

ஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் நேற்று (15) நடைபெற்றது. இதன்போது, சட்ட ஒழுங்கு ஆய்வு நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிதி மோசடி விசாரணைக் குழு இதுவரை 92 வழக்குகளை விசாரித்து சட்டமா அதிபரிடம் அறிக்கைகள் சமர்ப்பித்திருப்பதாகவும் அவற்றில் 11 சம்பவங்கள் மீது மட்டுமே சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், சட்ட நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற இதுவும் ஒரு காரணம் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தாஜுதீன் கொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான அனுர சேனநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டிருப்பது சட்ட மா அதிபர் திணைக்களத்தில் உள்ள பலவீனத்தையே காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா, விரைவில் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு புதிதாக 100 அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் இதன்மூலம் தாமதம் தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தக் குழுவின் முதலாவது சந்திப்பு சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் நீதி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன, அஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்க மற்றும் ஜனாபதி ஆலோசகர் நிஸ்ஸங்க நாணயக்கார, அஸேந்திரா சிறிவர்தன ஆகியோரும் இச்சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

Leave a comment