சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்ப்பை ஏற்றும்
குமாரன்: பிரதமர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் பேட்டி
தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கோ, அல்லது சமஸ்டி ஆட்ச்சிக்கோ, அல்லது “சமஸ்டி அல்லாத சமஸ்டி ஆட்ச்சிக்கோ (“nonfederal – federalism”) ஆதரவாக வாக்களித்தால் அந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.”— விஸ்வநாதன் உருத்திரகுமாரன்
COLOMBO, SRI LANKA, November 14, 2017 /EINPresswire.com/ —
சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) ஒன்றின் ஊடாக தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்வது அவசியமான விடயமெனவும் அவர்கள் அளிக்கும் தீர்ப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் மின்னஞ்சல் மூலம் “சிலோன் டுடே’ (Ceylon Today) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
பேட்டி வருமாறு:
1) கேள்வி: தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு அல்லது தீர்வுகள் வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டச் சீர்திருத்தச் செயல்வழி ஒன்று தொடர்கிறது; இது தொடர்பாக உள்ளூர்த் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குறிப்பான சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்கள்; மிக அண்மையில் உலகத் தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் தமிழர் குழுக்கள் மீளிணக்கம் நோக்கிய நேர்வகை முயற்சிகள் எடுத்து வருகின்றன – இவை உள்ளிட்ட இப்போதைய அரசியல் சூழலைக் கருதிப் பார்க்கையில், சிறிலங்கா தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தலையிட்டுச் செய்திருப்பவை என்ன?
பதில்: தமிழ் மக்களின் இறைமை அவர்களிடமே உள்ளது என்பதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு. 1972 மற்றும்/அல்லது 1978 அரசியலமைப்பு ஆக்கும் செயல்வழியில் தமிழ் மக்கள் பங்கேற்க வில்லை என்பதால், அவர்கள் தமது இறைமையை கொழும்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை. ஆகவே, இன்று, எந்தவோர் அரசியல் தீர்வுக்கும் முன்னதாக, அந்த அரசியல் தீர்வுச் செயல்வழியில் தாங்கள் எவ்வடிவில் பங்கேற்க விரும்புகிறோம் என்பதைத் தமிழ்த் தேச மக்கள்தாம் முடிவு செய்ய வேண்டும்.
சிறிலங்காத் தீவுக்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் தமிழ்த் தேசிய இன மக்கள் தமது விருப்பத்தை வெளியிடுவதற்குரிய அமைதியான, ஜனநாயக வழிகளில், ஒரு பொதுவாக்கெடுப்பு (Referendum) ஊடாகத் தங்கள் அரசியல் வருங்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கக்காலம் முதல் எடுத்து வரும் நிலைப்பாடு.
நாம் முன்வைக்கும் பொதுவாக்கெடுப்பு சுதந்திரத் தனியரசுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் வாக்களிப்பதற்கானது அன்று. ஒற்றையாட்சி அரசு, சமஸ்டி ஆட்சி அரசு, மாக்கூட்டாட்சி அரசு, (Confederation) சுதந்திரத் தனியரசு போன்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பு ஒன்றையே நாம் முன்வைக்கின்றோம்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்ற ஆண்டு நியூயார்க் நகரில் நாங்கள் நடத்திய மாநாட்டில் அறிஞர்களும் செயற்பாட்டளர்களும் அடங்கிய “வேண்டும் பொதுவாக்கெடுப்பு” எனும் குழு அமைக்கப்பட்டது. ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அவர்கள் விரைவில் ஒரு செயல்திட்டம் வெளியிடுவார்கள் என நம்புகிறோம்.
2) கேள்வி: புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறுபட்ட கருத்தியல் குழுக்கள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று வாதஎதிர்வாதம் செய்யக் கூடியவை என்னும் சூழலில், உள்நாட்டில், குறிப்பாக சிங்களரிடையே இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற எதிர்வகைப் பார்வை உள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினர் பிரிவினைவாத ஈழக் கொள்கைக்கான சுடரேந்திகளாக அறியப்பட்டுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலுவான பிரிவினைவாத மற்றும்/அல்லது தேசிய இனவாதப் பார்வைகள் கொண்டதா?
பதில்: என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்: தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்குப் பொதுவாக்கெடுப்பின் ஊடாகத் தீர்வு காண வேண்டும் என்று அனைத்துப் புலம்பெயர் குழுக்களிடையிலும் பொதுக்கருத்து காணப்படுகிறது. எமது அரசியல் தலைவிதியை பொதுவாக்கெடுப்பின் ஊடாக முடிவு செய்து கொள்வது அடிப்படை மனித உரிமை ஆகும்.
ஆக, இது அரசியல் பிரச்சினை மட்டுமன்று, இன்னுங்கூட முக்கியமாக மனித உரிமைப் பிரச்சினை ஆகும். சர்வதேச நடைமுறைகளும் இதற்கு ஏற்ற முறையிலேயே உள்ளன. தெற்கு சூடான் (மச்சாகோஸ் வகைமுறை) (Machakos Protocol) ஆனாலும்சரி, புனித வெள்ளி (Good Friday) உடன்பாடு ஆனாலும்சரி, செர்பிய-மொண்டனிக்ரோ உடன்பாடு ஆனாலும்சரி, பாப்புவா நியூ கினியா – போகன்விலா அமைதி உடன்பாடு (Papa New Guinee – Bougainvillea Peace Agreement) ஆனாலும்சரி, அனைத்தும் காட்டும் வழி தேசிய இனப் பிரச்சினையைப் பொது வாக்கெடுப்பின் ஊடாகத்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே.
இங்கு மேலும் ஒன்றை நான் உரைத்தாக வேண்டும்: பொதுவாக்கெடுப்பு என்று சொல்லும் போது நாடு முழுமைக்குமான போதுவாக்கெடுப்பை நாம் சொல்லவில்லை, குறிப்பிட்ட தேசிய இனத்துக்கான பொதுவாக்கெடுப்பையே சொல்கிறேன். உதாரணமாக, கனடிய உச்ச நீதிமன்றம் குவிபெக்கில் மட்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தச் சொன்னதே தவிர, கனடா முழுக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை.
அதே சமயம் சிறிலங்கா அரசு நெகிழ்வற்ற சிங்கள பௌத்த இனநாயகத் தன்மை கொண்டதாக இருப்பதால் சுதந்திரத்தின் ஊடாகத்தான் நாங்கள் இலங்கைத் தீவில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் அமைதியாக வாழ முடியும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.
1958, 1977, 1983 ஆண்டுகளிலும், முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டும் தமிழர்கள் பெருந்திரளாகக் கொலையுண்டதும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதும், சிறிலங்காப் படையினர் தமிழ்ப் பெண்களை வைத்துப் பாலியல் வல்லுறவு முகாம்கள் நடத்தி வருவதாக அண்மையில் வந்துள்ள செய்திகளும் இந்த எமது நம்பிக்கைக்கும் உறுதிப்பாட்டுக்கும் சான்றுபகரக் கூடியவை ஆகும்.
காலஞ்சென்ற இதழியலர் தார்சி விட்டாச்சி எழுதிய ‘நெருக்கடிநிலை – 58’ (Emergency 58) என்ற நூலையும் கவனப்படுத்த விரும்புகிறேன். 1958ஆம் ஆண்டு தமிழர்கள் பெருந்திரளாகக் கொலை செய்யப்பட்ட உடனே இந்நூல் எழுதப்பட்டது. அப்போது விட்டாச்சி தமது நூலின் முடிவில் “சிங்களர்களும் தமிழர்களும் பிரிந்து விடும் நிலைக்கு வந்து விட்டார்களா?” என்று கேட்டார்.
தமிழர்கள் இந்தக் கேள்வியை 1958 முதற்கொண்டே கேட்டு வருகிறார்கள். 1977 பொதுத்தேர்தலில் சுதந்திரத் தமிழீழம் அமைக்கப்படுவதைப் பெருவாரியாக ஆதரித்து வாக்களித்தார்கள்.
ஆனால் இப்போதே ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன்: தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கோ அல்லது சமஸ்டி ஆட்ச்சிக்கோ அல்லது “சமஸ்டி அல்லாத சமஸ்டி ஆட்ச்சிக்கோ (“nonfederal – federalism”) ஆதரவாக வாக்களித்தால் அந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
3) கேள்வி: பொதுவாக்கெடுப்பில் மக்கள் தரும் விடை பிரிவினைக்கு ஆம் என்று இருக்குமானால், நாட்டின் சாலச் சிறந்த நலன்களுக்கும், நாட்டிற்குள் வாழும் அனைத்துச் சமுதாயங்களின் நலன்களுக்கும் அது முரணாக இருக்கும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதவில்லையா?
பதில்: சுதந்திரத் தமிழீழ அரசு என்பது சிறிலங்காத் தீவிற்குள் வாழும் அனைத்து சமுதாயங்களுக்கும் இடையே நட்புறவுக்குத் துணைசெய்யும் என்றே நாங்கள் நம்புகிறோம். தீவில் மக்களினங்களிடையே அமைதியும் நட்புறவும் மலரச் செய்வதுதான் நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர, தற்சமயம் இருக்கும் எல்லைகளையோ அல்லது தற்போதைய நிகழ்வுகளையோ (status quo) பாதுகாப்பது நோக்கமாக இருக்கக்கூடாது.
மேலும், சுதந்திரத் தனியரசு என்ற வடிவில் நிரந்தர தீர்வு காண்பதன் மூலம் — பேராசிரியர் டொனால்டு ஹொரொவிட்ஸ் (Donald Horovitz) தமது கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பது போல் — சிங்கள அரசியல் சமூகத்திற்குள்ளான இனவாத பேரம்பேசலை நம்மால் அகற்றக் கூடும். சிங்களத் தலைவர்கள் பொதுமக்களின் அன்றாடச் பிரச்சனைகளில் முழுமையாகக் கவனம் செலுத்தலாம். அது சனநாயகத்துக்கும் வளர்ச்சிக்கும் பயன்படும்.
தமிழீழம் உருவானால் சிறிலங்காவுக்கும் தமிழீழத்துக்கும் இடையில் எப்போதும் பதற்றமாக இருக்கும் என்று சிலர் வாதிடக் கூடும். ஆனால் அப்படி இருக்கத் தேவையில்லை என நம்புகிறோம். நோர்வேக்கும் சுவீடனுக்கும் இடையிலோ சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலோ பதற்றமேதும் இல்லை. கொஞ்சம் பதற்றம் இருக்கும் என்றே வைத்துக் கொண்டாலும், நாட்டுக்குள்ளேயான (intrastate) வன்முறையைக் கட்டுப்படுத்துவதை விடவும் நாடுகளுக்கு இடையிலான (interstate) வன்முறையை கட்டுப்படுத்துவதற்கும் பதற்றத்தை சமாளிப்பதற்கு கூடியளவு சர்வதேச சட்டக் கொள்கைகளும் சர்வதேச பொறிமுறைகளும் இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
4) கேள்வி: புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் பிளவு அல்லது பிளவுகள் உண்டா?
பதில்: முன்பே சொன்னேன், தமிழர்கள் ஒரு தேசிய இனம், இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் தமது உரிமையாகிய சுயநிர்ணய உரிமையை மெய்ப்படச் செய்திட வழிசெய்ய வேண்டும் (realize) என்பன போன்ற அடிப்படை விடயங்களில் கருத்து வேறுபாடு ஒன்றுமில்லை. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இப்போதுள்ள எல்லைகளுக்குள்ளேயே மெய்ப்படச் செய்திட முடியுமென்று புலம்பெயர் தமிழர்களின் சில குழுக்கள் நம்புவதையும் நான் மறுக்கவில்லை.
5) கேள்வி: இலங்கையில் பிறவாது, இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்து வளர்ந்த இளையோர் உள்ளனர். தங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் கண்கள், செவிகள் வழியே பட்டறிந்துள்ள போர் தொடர்பாகவும், நாட்டிலுள்ள நடப்பு நிலைமை தொடர்பாகவும், சிறிலங்காவை சீரமைப்பதில் தங்களுக்குள்ள எதிர்காலப் பங்குப்பணி குறித்தும் இந்த இளையோரின் கண்ணோட்டத்தை வடித்திட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதென்ன?
பதில்: மனித உரிமை பற்றிய உரையாடல் வழியாகவும் பண்பாட்டுய் நிகழ்வுகளின் ஊடாகவும் இளைய தலைமுறையின் இதயத்திலும் மனத்திலும் அவர்களின் ஓர்மையையும் அடையாளத்தையும் விதைக்கிறோம். முள்ளிவாய்க்கால் இனவழிப்பு குறித்தும், தொடர்ந்துவரும் கட்டமைப்பியல் இனவழிப்பு குறித்தும், அவர்களின் உற்றார் உறவினர் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டிய அவர்களின் தார்மீக கடமைப்பாடு குறித்தும் உணர்வூட்டுகிறோம்.
இப்போது ஜெனிவாவிலும், தாயகத்திலும் கூட, எமது மக்களுக்கு நீதி கிட்டச் செய்வதில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பதை காண்கிறோம். ஆனால் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்பதையும் நான் சொல்லத்தான் வேண்டும்.
6) கேள்வி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ள (நிதி வகையிலும் இராஜதந்திர வகையிலுமான) ஆதரவு திரட்டும் முயற்சிகள் என்ன?
பதில்: எந்தவோர் அரசியல் நகர்வுக்கும் பலம் இன்றியமையாதது என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. இப்போதைய சர்வதேச உறவுகளிலும் சர்வதேச சட்டத்திலும் அரசல்லாத செயலாண்மைகள் (non state actors) கணக்கில் கொள்ள வேண்டிய யதார்த்தத்தை காண்கிறோம் (power to be reckoned with).
இம்மாதம் ஃபாரின் அஃபர்ஸ் (Foreign Affairs) இதழில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை உலகத்தை முத்துருவ (மூன்று துருவ) உலகமாகக் குறிப்பிடுகிறது; குடியாண்மை (சனநாயக) அரசுகளும், வல்லாண்மை (எதேச்சாதிகார) அரசுகளும், அரசல்லாத செயலாண்மைகளும் (non-state actors) இப்போது அதிகாரம் செலுத்துகின்றன. சர்வதேச அரசியல், நீதியியல் அரங்கில் அரசல்லாத செயலாண்மைகளால் (non-state actors) தாமாகவே சில செயல்கள் நிகழ்த்த முடியும்.
இவ்வகையில் நாம் சர்வதேச சமுதாயத்தின் ஆதரவை அணிதிரட்டுவதில் ஈடுபட்டுள்ளோம். இது நோக்கி, சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (International Criminal Court – ICC) அனுப்ப வேண்டி 16 இலட்சம் (1.6 மிலியன்) கையொப்பம் திரட்டும் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.
இப்போது, அனைத்துலகக் காணமல் ஆக்கப்பட்டோர் நாளில், அதாவது ஆகஸ்டு 30ஆம் நாள் மற்றுமொரு பன்னாட்டு இயக்கத்துக்குத் திட்டமிட்டு வருகிறோம். காணாமற்போகச் செய்தலால் பாதிப்புற்றவர்களுக்கு உண்மையும் நீதியும் வேண்டி, அரசுசாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அனைத்து வகைக் கூட்டு அமைவுகளையும் அணிதிரட்டி இதனைச் செய்ய உள்ளோம்.
7) கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் புத்தெழுச்சி பெறுவார்கள் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப்போதும் நம்புகிறதா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறதா?
பதில்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைப்புச் சட்டம் அது தன் அரசியல் குறிக்கோள்களை அமைதி வழிகளின் ஊடாக அடையக் கட்டளையிடுகிறது. எந்த ஒரு வெளிநாட்டிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இயங்குவதற்குச் சட்டத் தடை ஏதுமில்லை. உண்மையில், பல்வேறு நாடுகளிலும் இராஜதந்திரிகள் நேரடியாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
8) கேள்வி: சிறிலங்கா குறித்து பன்னாட்டுச் சமுதாயமும், மேற்குலகும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் அண்மையில் கடைசியாக எடுத்துள்ள நிலைப்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு புரிந்து கொள்கிறது?
பதில்: முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்தவுடனே, தமிழர்களுக்கு நீதி கிட்ட வேண்டும், சர்வதேச குற்றங்கள் செய்தோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது சர்வதேச சமுதாயத்தின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், முன்னாள் அதிபர் இராசபட்சேயும் வேறு சில தனியாட்களும்தான் இதைச் செய்தவர்கள் என அவர்கள் கருதினர். ஆகவே சிறிசேனா பொறுப்புக்கூறலையும் தமிழ்த் தேசிய இன பிரச்சினையையும் கவனித்துக் கொள்வார் என்று நம்பி அவரை ஆட்சியிலமர்த்தினர். ஆனால், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஐநா தனி அறிக்கையாளர் சென்ற மாதம் அளித்துள்ள கடுமையான அறிக்கை இந்த மாயையைக் கலைப்பதாக உள்ளது. தண்டனைக் கவலையில்லாக் குற்ற நிலைக்கும் (impunity) தமிழின அழிப்புக்கும் சிறிலங்கா அரசே காரணம் என்பதைப் சர்வதேச சமுதாயம் உணரத் தொடங்கி விட்டது.
9) கேள்வி: சிறிலங்காவின் ஆயுதப் படைகள் செய்ததாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய புலனாய்வைப் பொறுத்த வரை, புலிகள் செய்த கொடுமைகளுக்கான பொறுப்புக்கூறல் எவ்வாறு அடையப்பெறும்? இவ்வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலையீடு எத்தகையதாக இருக்கும்?
பதில்: முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட்ட இனவழிப்புக்கு (genocide) நீதி பெறுவோம் என்பது தமிழர்களின் உளமார்ந்த நம்பிக்கை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்கள் இந்த இன அழிப்பை குவிமையமாகக் கொண்டுள்ளன.
10) கேள்வி: இப்போதைய நாட்டு நிலைமையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு புரிந்து கொள்கிறது?
பதில்: சிறிலங்காத் தீவு நாட்டில் தமிழர்களின் நிலைமையைப் பொறுத்த வரை, பெரும்படியாகப் பார்த்தால், கட்டமைப்பியல் இனவழிப்பு இன்றும் தொடர்கிறது. போர்க் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இராணுவம் இப்போதும் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல் தெரியவில்லை. அதேபோது சித்திரவதையும் பாலியல் வன்முறையும் பரவலாகத் தொடர்கின்றன.
சிறிலங்கா படையினர் தமிழ்ப் பெண்களை வைத்து நடத்தும் பாலியல் வல்லுறவு முகாம்கள் இப்போதும் செயல்படுவதாக சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் அறிக்கையளித்துள்ளன. இவை இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் சப்பானியப் பேரரசின் இராணுவம் நடத்திய “ஆற்றுகைப் பெண்கள்” (“comfort women”) முகாம்களைப் போன்றவை. தெற்கில், சிறிசேனா ஆட்சியின் தொடக்கக் காலத்தில் தெற்கில் சில சனநாயக வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், இப்போது தெற்கில் ஜனாதிபதி இராசபட்சே ஆட்சியைப் போலவே சிறிசேனா ஆட்சியும் “சனநாயகக் கலைப்பு” (“democratic deconsolidation) வேலையில் ஈடுபட்டுள்ளது.
11) கேள்வி: நாட்டில் மீளிணக்கம் எந்நிலையில் உள்ளது?
பதில்: என் முந்தைய மறுமொழிகளே இந்தக் கேள்விக்கும் விடையளித்துள்ளன.
12) கேள்வி: தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு) குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனநிறைவடைகிறதா?
பதில்: உள்நாட்டுத் தலைமை தமிழர்களின் அரசியல் வேணவாக்களை முழுமையாக வெளிப்படுத்த விடாமல் ஆறாம் அரசியலமைப்புச் சட்டத் திருத்த சட்டத் தடைகள் இருப்பதை புரிந்து கொள்கிறோம். குறிப்பாகச் சொன்னால் இலங்கைத் தீவுக்குள் இராணுவமயம் நிகழ்ந்து, அரசியல் வெளி குறுகியதால்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டது என்பதே உண்மை.
ஆறாம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் சுதந்திரத் தனியரசு கேட்பதைத் தடை செய்கிறது என்றாலும், ஆறாம் திருத்தத்தை நீக்குமாறு கேட்பதைத் தடை செய்யவில்லை.
உள்நாட்டுத் தமிழ் அரசியல் தலைமையானது இந்த உண்மையைப் சர்வதேச சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமே தவிர, தமிழர்கள் முன்போல் சுதந்திரத் தனியரசு கேட்கவில்லை என்று தவறாகப் படம்பிடித்துக் காட்டக் கூடாது என விரும்புகிறோம். இது உண்மையன்று என்று அவர்களுக்கே தெரியும்.
சுதந்திரத் தனியரசுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் வலுப்படுத்தியுள்ளது. தமிழர்கள் சுதந்திரத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாக யாராவது, குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்குப் பின், கூறிக் கொள்வார்களாயின், அது பொய்மையே.
மேலும், உள்நாட்டுத் தலைமை சில ஆக்கவழிச் செயல்களை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்; எப்படி என்றால், வெனிசுவேலாவில் எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த பொதுவாக்கெடுப்பு, இராக்கிய குர்திஸ்தானிலும் கட்டலோனியாவிலும் நடந்து முடிந்துள்ள பொதுவாக்கெடுப்புகள் போல் செய்யலாம். இந்தப் பொதுவாக்கெடுப்புகள் உள்நாட்டுத் தலைமை ஒழுங்கு செய்தவையே தவிர, ஐநாவோ அல்லது எந்த அயல்நாடோ ஒழுங்கு செய்தவை அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
13) கேள்வி: வருங்காலத்தில் சிறிலங்காவில் தேசிய அளவில் நடக்க கூடிய தேர்தல்களில் போட்டியிட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?
பதில்: முன்பே பல தருணங்களில் நான் கூறியுள்ளேன், தமிழர்கள் தமது இறைமையை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்புவிக்கவில்லை என்பதால், சிறிலங்காத் தேர்தல்களை முறையானவை என்று நாம் கருதவில்லை. எவ்வாறாயினும், எமது இலக்குகளை முன்னகர்த்தும் மேடையாக இத்தேர்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். நாம் இப்படிச் செய்வதற்கு ஆறாம் அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தை நீக்கியாக வேண்டும்.
14) கேள்வி: நீங்கள் இப்போது சிறிலங்கா அரசாங்கத்தோடு சேர்ந்து வேலை செய்கிறீர்களா? இல்லையென்றால், எதிர்காலத்தில் அப்படிச் செய்ய விரும்புகிறீர்களா?
பதில்: முன்பே நான் கூறியதுதான், ஒரு பொதுவாக்கெடுப்புக்கான திட்டமிடல் மற்றும் கால அட்டவணை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தோடு சேர்ந்து வேலை செய்ய விரும்புகிறோம்.
15) கேள்வி: முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் எம்.ஏ. சுமந்திரன் எமக்களித்த பேட்டியில், புதிய அரசமைப்பின் வாயிலாகத் தேசிய இனச் சிக்கலுக்கு ஒரு தீர்வு வருமாயின் புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்து வளர்ச்சிக்கு உதவுவதை நாங்கள் உத்தரவாதம் செய்வோம் என்று சொன்னார். இந்தக் கூற்றினை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றீர்கள்? புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்காகச் செய்ய விரும்பும் முதலீடு (பண முதலீடு மட்டுமன்று) என்ன? அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தங்களின் செயல்வழி தொடர்பான நிகழ் நிலவரத்தையும் அதில் புலம்பெயர் தமிழர்களின் பங்கினையும் எவ்வாறு புரிந்து கொள்கின்றீர்கள்?
பதில்: நான் முன்பே கூறியது போல, நிரந்தர அரசியல் தீர்வு ஏதும் வேண்டுமானால், அது தமிழ்த் தேசத்துக்காக நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பின் ஊடாகத்தான் வரவேண்டும். பொதுவாக்கெடுப்பின் ஊடாக ஓர் அரசியல் தீர்வு ஏற்பட்டு விட்டால் சிறிலங்காத் தீவிலிருக்கும் அமைவுகளுக்குப் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பல்வேறு துறைகளிலும் தன வல்லமையையும், அதே போல் நிதி முதலீட்டையும் கொண்டு சேர்க்கும்.
16) கேள்வி: வட மாகாண சபை, உங்கள் பார்வையைப் பொறுத்து, செய்துள்ள அல்லது செய்யாதுள்ள பணியை எவ்வாறு புரிந்து கொள்கின்றீர்கள்? மற்றபடி, வடக்கு, கிழக்கு இணைப்பு என்னும் முன்மொழிவு குறித்துச் சொல்லுங்கள்.
பதில்: வட மாகாண சபைத் தேர்தலின் போதே சொன்னோம், மாகாண சபையால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது. இப்போது இதே கருத்தை முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களே உறுதி செய்துள்ளார்.
இணைப்பைப் பொறுத்த வரை, இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதி தமிழர் தாயகமாகும் என்பதை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இணைப்பு நீக்கம் செய்நுட்பக் காரணங்களால் (technical ground) நடைபெற்றது. இப்போதைய அரசாங்கம் உட்பட சிறிலங்கா அரசாங்கம் தமிழர் அரசியல் அபிலாசைகள் குறித்து உண்மையாக இருக்குமானால், சாதாரண பெரும்பான்மை கொண்டே வடக்கு-கிழக்கை மீண்டும் இணைக்கலாம். இந்த இணைப்புக்கு மூன்றிலிரு பங்குப் பெரும்பான்மை தேவையில்லை.
17) கேள்வி: இது வரை கேட்ட கேள்விகளில் உட்படாத கூறுகள் குறித்து நீங்கள் விளக்கிக் காட்ட விரும்பினால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேறு எது குறித்து வேண்டுமானாலும் தாராளாமாகக் குறிப்பிடலாம்.
பதில்: ஒரு மிலியனுக்கு மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுதந்திர சாசனம் ஒன்றைப் பறைசாற்றியது. சுதந்திர சாசனத்தில் முஸ்லிம்களின் தனித்துவ ஓர்மை அங்கிகரிக்கப் பட்டுள்ளது; கல்வி அனைவருக்கும் கட்டாயமும் இலவசமும் ஆகும்; தமிழும் சிங்களமும் ஆங்கிலமும் தமிழீழத்தின் ஆட்சிமொழிகளாக இருக்கும்; நலவாழ்வு (உடல்நலம்) அடிப்படை உரிமையாக அறிந்தேற்கப்படும்; சுற்றச் சூழல் பாதுகாக்கப்படும்; சூரியன், காற்று, கடலலை போன்ற வழிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அழுத்தம் தரப்படும் போன்ற விடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழீழம் இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைவுற்றிருப்பதால், இப்பெருங்கடலில் அமைதிக்கும் இசைவுக்கும் (harmony) துணைசெய்யும்.
விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தொடர்பு: pmo@tgte.org
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1-212- 290- 2925