தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடு வது அநேகமாக நிச்சயமாகிவிட்டது. முன்னர் எதிர்பார்த்தபடி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகித் தனிவழியில் செல்வதற்குத் தீர்மானித்து விட்டது. இனிமேல் வேறு எவருடனாவது கூட்டணி அமைப்பதற்கான பேச்சில் அந்தக் கட்சி ஈடுபடப் போகின்றது.
ஆனால் சில்லறை விடயங்களுக்காக கூட்டமைப்பு பிளவுபட முடியாதென வும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் தாம் பேசவுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் தெரித்துள்ளார். எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறினார் என்பது தெரியவில்லை.
கூட்டமைப்பைத் தொடர்ந்து விமர்சித்து வரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.
ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கூட்டமைப்பின் தலைவரையும், கூட்டமைப்பையும் குறைகூறுவதைத் தமது வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் கூட்டமைப்பில் இருந்து கொண்டே கூட்டமைப்பை விமர்சித்து வந்ததை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சபாநாயகரிடம் சம்பந்தன் தொடர்பாக முறைப்பாடு செய்யும் அளவுக்கு சிவசக்தி ஆனந்தன் அரசியலில் கீழிறங்கிச் சென்றிருக்கக் கூடாது.
ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் , மாகாண சபை உறுப்பினர்களும் தேர்தல்களில் தமிழ் அரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் இவர்கள் தமது பதவிகளைக் கூட இழக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.
மேலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீரென இந்த முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. நீண்ட காலமாகத் திட்டமிட்டு தரும் பார்த்து இந்த முடிவுக்கு வந்ததாகவே எண்ணத் தோன்றுகின்றது.
வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பெரும் அபிமானத்தைப் பெற்றதால், கூட்டமைப்புக்கு இந்த நாட்டில் மட்டுமல்லாது அயல் நாடுகளிலும் மதிப்பு அதிகமாக உள்ளது. தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கலந்துரையாடுவதை இங்கு வருகை தருகின்ற அயல் நாட்டு இராஜதந்திரிகள் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர்.
இலங்கை அரசும் கூட்ட மைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் அந்த அமைப்பு பிளவுபடுமானால் அதன் மதிப்புக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டு விடும்.
தமிழர்கள் தம்மிடையே பிளவுபடுவது எதிரிக்கு வாய்ப்பாக ஆகிவிடும்
தமிழர்கள் மேலும் மேலும் பிளவு பட்டு நிற்பது எதிரிகளுக்குச் சாதகமாகி விடும். தேர்தல்கள் வருவதையொட்டி கூட்டமைப்புக்கு எதிரான சக்திகள் தம்மை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. தேர்தல்களின் மூலமாகக் கிடைக்கப்போகின்ற ஆசனங்களை மட்டுமே அவை இன்று கணக்குப் போடுகின்றன. தமிழர்களின் ஒற்றுமை சிதைக்கப்படுவது தொடர்பாக இந்தச் சக்திகள் எள்ளளவும் கவலைப்படுவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடுமையாக எச்சரித்துள்ளது. அரசியல் கைதிகளின் உணவு ஒறுப்புப் போராட்டம் தொடர்பில் முடிவு ஒன்றை எட்டுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய முன்வருமாறு ஒன்றியத்தினர் விடுத்த அழைப்பை நிராகரித்து, கூட்ட மைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கூட் டத்துக்கு சமூகம் தரவில்லை.
இதன் காரணமாகவே மாணவர் ஒன்றியத்தின் சீற்றம் கூட்டமைப்பின் பக்கம் திரும்பி யுள்ளது. இது தொடர்பாகக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் களின் கருத்து என்னவென்று இதுவரை தகவல் வெளிவரவில்லை.
பல்கலைக்ழக மாணவர்
சமூகத்தின் எதிர்ப்பை
எதிர்நோக்கப்போகும் கூட்டமைப்பு
ஆனால் வடக்கில் இடம்பெறப் போகும் தேர்தல்களில் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பை கூட்டமைப்பு எதிர்கொள்ள வேண்டி நேரிடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இவ்வாறான தொரு நிலையே காணப்பட்டது. அதனால் கூட்டமைப்பி னர் இது தொடர்பாகப் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்களென நம்பலாம்.
கூட்டமைப்புக்கு எதிராக அமைக்கப்படப்போகும் பொது எதிரணி, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உளச் சுத்தியுடன் செயற்படுமாயின், மக்கள் அதை ஏற்கவே செய்வார்கள். இன்றைய நிலையில் தமிழ் மக்கள் செய்வதறியாத நிலையில் திகைத்து நிற்கின்றனர். இவர்களின் தலைகளை அழுத்துகின்ற பிரச்சினைகளை இறக்கி வைப்பதற்கு நேர்மையான அரசியல் தலைமையொன்று அவர்களுக்குத் தேவையாகவுள்ளது.
சம்பந்தன் நேர்மையான ஒரு தலைவர் என்றாலும் அவரது செயற்பாடுகளில் மக்கள் பூரணமான திருப்தியைக் கொண்டிருப்பதற்தாகத் தெரியவில்லை.
ஆகவே கூட்டமைப்பு நிலைமைகளை உணர்ந்து தனது செயற்பாடுகளில் கால நேரத்துக்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் எம்மைத் தொடர்்நது ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையைஒதுக்கி வைத்துவிட்டு சவால்களைச் சமாளிப்பதற்கான வியூகங்களை கூட்டமைப்பினர் அமைத்துக்கொள்ள வேண்டும்.