அமைச்சர் மங்கள சமரவீர இரண்டு பிரதான கட்சிகளிலும் செயற்பட்டவர். அவர் இரு கட்சிகளினதும் கொள்கைகளை உள்வாங்கி வரவு செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளமை வரவேற்கத்தக்கது. அவரது வரவு செலவுத் திட்டமும் மிகச் சிறப்பானது. இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலரும், அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நேற்றுமுன்தினம் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது கன்னி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தி ருக்கின்றார். இதில் பல பசுமையான விடயங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கவொரு விடயம்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது தனது கொள்கைகளுக்கு உட்பட்டதாகவும் நாட்டின் எதிர்காலம் தொடர்பாகவும் கவனம் செலுத்தி பல முன்மொழிவுகளைச் செய்திருந்தோம். அது குறித்த தொகுப்பொன்றையும் நாம் நிதி அமைச்சரிடம் கையளித்திருந்தோம்.
அந்த விடயங்கள் தொடர்பாக நிதி அமைச்சர் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளமைக்கு எமது நன்றிகள். தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் உதவிகள் வழங்குதல், பன்னாட்டு முதலீட்டுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பாகவும் நாம் செய்த முன்மொழிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கனவுலக வரவு செலவுத் திட்டம் என்று விமர்சித்தார்கள். அவ்வாறு விமர்சித்த மகிந்த அணியால் தற்போது வரவு செலவுத் திட்டம் குறித்து சரியான விமர்ச னங்களை வெளிப்படுத்த முடியாதுள்ளது. இந்தச் சபையில் அவதானிக்க முடிகின்றது.
வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டவர்களுக்கு காணிகளை வழங்கி இருப்பதாகவும் இதனால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அது மட்மன்றி அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு வெளியிடப்பட்ட அச்சம் சம்பந்தமாக நாம் அமைச்சரவையில் ஆராய்ந்தோம்.
எமது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் தரப்பினருக்கு காணிகளை வழங்குவது தவறாகாது. முறையின்றி வெளிநாட்டவருக்கு காணிகளை வழங்குவதை அனுமதிக்க முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்கப் போவதில்லை என்பதைப் பொறுப்புடன் கூறுகின்றேன்.
தற்போது அரச வளங்கள் தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. செவனகல சீனித் தொழிற்சாலையை வழங்கப்போவதாக இப்போது அதிகளவில் பேசப்படுகின்றது. செவனகல சீனித் தொழிற்சலை மட்டுமல்ல அரசுக்குச் சொந்தமான எந்தவொரு சொத்துக்களையும் நாம் தனியாருக்கு விற்பனை செய்வதை அனுமதிக்கப்போவதில்லை.
ஆனால் அரச தனியார் கூட்டு முயற்சிகள் முறையாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு நாம் ஆதரவளிப்போம் என்றார்.