உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் களமிறங்குவதற்குரிய இறுதி முடிவை மகிந்த அணி நேற்று அறிவித்தது.
தற்போதைய ஆளுந் தரப்பிலுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து போட்டியிட முன்வரும் பட்சத்தில் அவர்களை உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியிலுள்ள மகிந்த அணியினர் பழிவாங்கப்படுவதால் தனிவழி செல்லும் இந்த முடிவு தொடர்பில் ஆளுங்கட்சியுடன் எந்தச் சமரசத்துக்கும் செல்வதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற மகிந்த அணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தின்போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
‘‘ஏற்கனவே பல தடவைகள் எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துள்ளோம். மீண்டும் அவ்வாறு ஏமாற நாம் தயாராக இல்லை. அரசின் பக்கம் இருக்கும் எவரும் எம்முடன் சேரலாம். அவர்களுக்காக எங்களது கதவு எப்போதும் திறந்தே இருக்கும்’’ என்று நேற்றைய கூட்டம் தொடர்பில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன (மகிந்த அணி) என்று மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.