நடப்பு வருடத்தின் சமுர்த்திப் பயனாளிகளின் முத்திரைகள் வெட்டப்பட்டாலும் அதன் பின்னரான நடைமுறைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பயனாளிகளைத் தெரிவு செய்வதில் முன்னர் எவ்வாறான நடைமுறை காணப்பட்டதோ அந்த நடைமுறையே தற்போதும் காணப்படுகிறது.
வருமானம் அதிகரிப்போருக்கே அது நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. நடப்பு வருடத்தில் சமுர்த்திப் பயனாளிகளின் முத்திரைகள் வெட்டப்பட்டன. அது நியாயமற்றது என்று மக்கள் தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
உண்மையில் சமுர்த்தி முத்திரைகள் கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்த குடும்பங்க ளுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு, தேவையற்றவர்களுக்கு கொடுப்பவனவு வழங்கப்படும் நிலையில் பெயர்ப் பட்டியில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான மீளாய்வு நடவடிக்கைகள் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் நடைபெற்றன.
இதன்போது பயனாளிகளின் தெரிவு தொடர்பில் தவறுகள் நடைபெற்றமை தெரிய வந்தது. இது தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு, பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்ட முறைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம், முன்னர் இருந்த வழமையான முறையில் சமுர்த்திப் பயனாளிகளின் கொடுப்பனவுகளை வழங்கவும் என்று கொழும்பு அரசு தெரிவித்து இருந்தது.
இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக சமுர்த்திப் பிரிவு தெரிவித்ததாவது,
வெளியிடப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளின் விவரங்கள் ஆராயப்பட்டன. உண்மையாக வருமானம் குறைந்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமுர்த்தி க் கொடுப்பனவு கிடைக்கவில்லை.
ஆகவே தற்போது முன்னர் காணப்பட்ட முறைக்கு அமைவாக பயனாளிகள் தெரிவு நடைபெற்று வருகின்றது. மாத வருமானம் அதிகமாக உள்ளவர்கள் பயனாளிகளாக உள்ளனர் என்றால், அவர்களின் சமுர்த்திக் கொடுப்பனவுகளை, மாத வருமானம் குறைந்தவர்களைத் தெரிவு செய்து வழங்கும் செயற்பாடு நடைபெற்று வருகின்றது.
முத்திரை வெட்டப்பட்டமை தொடர்பில் பின்னர் மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.