யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத் திட்டம் கைவிடப்படப்போவ தில்லை. மாறாக அதற்குரிய இடம் மாற்றப்படுவதற்கே சந்தர்ப்பம் உள்ளது என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் தலா 5 இலட்சம் பெறுமதியான 24 வீடுகள் அமைப்பதற்கான திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது.அந்தத் திட்டத்தை யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மடத்து வளவுப் பிரதேசத்துக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் உள்ள 6 ஏக்கர் நிலப்பரப்பு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரிக் கிராமத்துக்குச் சொந்தமானது. போர்க்காலச் சூழ்நிலையில் அங்கே 44 குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. அங்கே வாழ்ந்தவர்கள் தற்போது காரைநகரைச் சூழவுள்ள மூளாய், பண்டத்தரிப்பு, பொன்னாலை போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே அவர்களுக்கு வீடுகள் அவசியமாகும். ஆகவே மடத்து வளவுப் பகுதியில் இந்த 24 வீடுகள் திட்டத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.குறித்த 6 பரப்புடன் சேர்த்துக் குறிப்பிட்ட ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த வகையில் ஆரம்பத்தில் அந்தக் காணியை கடற்படையினர் வழங்குவதாக தெரிவித்த போதிலும் தற்போது அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் அந்தக் காணியை வழங்கு வதற்கு கால நீடிப்பு தேவைப்படுகின்றதாகத் தெரிகின்றது.
ஆனால் இந்திய அரசின் இந்தத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய தேவை உள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் அத்திபாரம் போடும் பணி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
இந்த நிலையில் உடனடியான தேவைக்கு மடத்து வளவு காணியைப் பயன்படுத்த முடியாது. ஆகவே காரைநகர் பிரதேசத்தில் வேறு ஒரு காணியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலர் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே இந்திய வீட்டுத் திட்டம் கைவிடப்படாது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.