வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன் சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் அண்மைக்காலமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக பல இடங்களில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் யானை வேலி அமைக்கப்பட்ட போதிலும் இன்றும் பல கிராமங்கள் யானையின் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றது.
இந்நிலையில் அதிகாலை புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் நுழைந்த யானைக்கூட்டமொன்று அங்கிருந்த தென்னந்தோட்டமொன்றினுள் புகுந்து காய்க்கும் பருவத்தில் இருந்த தென்னை மரங்களை அழித்துள்ளதுடன், பயன்தரு மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
இதேவேளை அப்பகுதியில் இருந்த தற்காலிக வீடொன்றின் சுவரைத் தாக்கி உடைத்துள்ள யானை பல காணிகளினுள் இருந்த தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
தேங்காயின் விலையேற்றம் அதிகமாகவுள்ள நிலையில் தென்னை மரங்களை யானை அழிப்பது தொடர்பில் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டதுடன் தமது கிராமத்திற்கு வரும் யானைகளை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.