152 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் குறித்த குற்றப்பத்திரிகை இன்று மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் பிரதிவாதிகள் ஒவ்வொருவரையும் ஒரு இலட்சம் ரூபா பிணை மற்றும் 2 மில்லியன் ரூபா சரீரப்பினையில் விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபர்களுக்கு நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி மீண்டும் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜூன் 6ம் திகதி இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட 1500 மில்லியன் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களை வரி செலுத்தாமல் கொண்டு செல்வதற்காக பஞ்சிகாவத்தை வியாபாரி ஒருவரிடம் 152 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் குறித்த நான்கு சுங்க அதிகாரிகளும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.