யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

268 0

யாழ்ப்பாணத்தில் நான்கு இடங்களில், இரண்டு மணி நேரத்தினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து, குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (14) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களினால், சிறுவன் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். மானிப்பாய், ஆறுகால்மடம், கோண்டாவில், நல்லூர் ஆகிய பகுதிகளிலேயே குறித்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய்

மானிப்பாய் – சங்குவேலி பகுதியில், முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, வாள் வெட்டுக்குழு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பித்த சாரதி, வீடொன்றுக்குள் அடைக்கலம் புகுந்தவேளை, வீட்டுக்குள் உட்புகுந்த தாக்குதலாளிகள் வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதில், மானிப்பாய் – குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா ஜெனீஸ்கரன் ( வயது – 35), இராசதுரை ரவிசங்கர் ( வயது 40), ரவிசங்கர் பகீரதன் ( வயது 15), சங்குவேலி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் ( வயது- 54) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

ஆறுகால்மடம்

4 மோட்டார் சைக்கிள்களின் பயணித்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் உட்புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளது. இதில், ஆனைக்கோட்டை – லோட்டஸ் வீதியைச் சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் (வயது 35) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

கோண்டாவில்

கோண்டாவில் டிப்போக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றுக்குள் உட்புகுந்த கும்பல் ஒன்று, உணவகத்தில் உணவு உட்கொண்டிருந்தவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்திவிட்டு, உணவகத்தில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளது. அத்துடன், உணவகத்தில் பணிபுரியும் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் (வயது 27) என்ற இளைஞனை வாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது.

நல்லூர்

நல்லூர் – முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பலொன்று, அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது. அத்துடன், வீட்டிலிருந்த ராஜன் (வெள்ளை), லக்ஸ்மன் ஆகிய இருவரை வெட்டிக் காயப்படுத்திய கும்பல், வீட்டுக்கு முன்பாக நின்ற மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றது.

Leave a comment