டிசம்பர் மாத இறுதிக்குள் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சர்

339 0

கீழடியில் டிசம்பர் மாத இறுதிக்குள் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 119 பள்ளிகளில் இருந்து 230 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்பாற்றலை ஓவியங்களாக வரைந்தனர்.

அதில் சிறந்த 72 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த ஓவியங்கள் அனைத்தும் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கண்காட்சி கூடத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன. அதன் திறப்பு விழாவும், அந்த ஓவியங்களை வரைந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவும் நேற்று எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.

விழாவில் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று மாணவர்களின் ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பள்ளி குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை வளர்க்க அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் துறை சார்பில் இதுபோன்ற பல போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும். எழும்பூர் அரசு அருங்காட்சியகம் அதன் தொன்மை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அருங்காட்சியகத்தை உலக தரத்தில் தரம் உயர்த்த மத்திய தொல்லியல் துறை மந்திரி மகேஷ் சர்மாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். சென்னையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியுடன் எழும்பூர் அருங்காட்சியகத்தை பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். டிசம்பர் மாத இறுதிக்குள் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

அழகன்குளம் அகழ்வாராய்ச்சி பணி தற்போது நிறைவடைந்துள்ளது. அதில் பணியாற்றிய 12 பேர் கொண்ட குழுவை வைத்து கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மத்திய தொல்லியல் துறையினருடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ‘41 அகழ்வாராய்ச்சி அறிக்கை, 80 அகழ்வாராய்ச்சி முடிவுகள்’ ஆகியவற்றை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக மத்திய தொல்லியல் துறை இயக்குனரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்தில் அருங்காட்சியகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதியதாக அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு அதன்மூலம் வரலாற்று நினைவு சின்னங்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு இயற்பியல், உயிரியல் சோதனைக்கூடம் உள்ளது போல் வரலாற்று ஆய்வுக்கூடம் ஏற்படுத்தப்பட்டு கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் அருங்காட்சியகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment