அரசு பணியில் கவர்னர் ஆட்சி நடப்பது தெரிகிறது: முத்தரசன், திருமாவளவன் கண்டனம்

438 0

அரசு பணியில் கவர்னர் ஆட்சி நடப்பதாக தெரிகிறது என்று அரசியல் தலைவர்கள் முத்தரசன், திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆய்வு மேற் கொண்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

தமிழ்நாட்டில் ஓராண்டு காலமாக செயல்படாத அரசு இருந்து வருகிறது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மக்கள் ஆதரவை, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை இழந்து, ஒரு தார்மீக பலத்தை இழந்து விட்ட நிலையில் இப்படிப்பட்ட விபரீதங்கள் தொடர்கின்றன.

அதன் ஒரு பகுதியாக கவர்னர் கோவையில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. அதன் செயல்பாடு எப்படி இருந்தாலும் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு என்பதை மறுக்க முடியாது.

ஆனால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடப்பது போல கவர்னர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இது தவறான முன் உதாரணமாகும். மாநில சுயாட்சிக்கு எதிராக நடைபெறுகின்ற யுத்தமாகும். இதை முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கண்டித்து இருக்க வேண்டும். எதிர்த்து குரல் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படி செய்யாமல் கவர்னர் செய்தது சரிதான். அதில் தவறு இல்லை என்று கூறியிருப்பது மத்திய அரசின் அடிமையாக மாநில அரசு செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறிய விமர்சனங்கள் உண்மை என நிரூபிக்கப்படுகிறது.

ஜனநாயக நம்பிக்கை உள்ளவர்கள், மாநில சுயாட்சி மீது நம்பிக்கை உடையவர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்க கூடியவர்கள் கவர்னரின் இந்த நடவடிக்கையை கண்டிக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்:-

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட மாகாண முதல்வர்களை மீறி கவர்னர்கள் இப்படி அத்து மீறி செயல்பட்டதாக தெரிய வில்லை. மிசா நடைமுறையில் இருந்த காலத்தில் கவர்னர்தான் ஆட்சி நிர்வாகத்தை வழி நடத்தினார். அதே போல குடியரசு தலைவர் ஆட்சி நடை முறையில் உள்ள மாநிலங்களில் மட்டுமே கவர்னர் நேரிடையாக அதிகாரிகளை சந்திப்பது, ஆணையிடுவது வழக்கம்.

தற்போது இந்தியாவில் மிசாவும் நடைமுறையில் இல்லை. தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியும் நடைமுறையில் இல்லை. ஆனால் கவர்னர் தனது அதிகார வரம்புகளை மீறி மாவட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து இருப்பது சட்டத்தையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயலாகும். இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

புதுடெல்லியும், புதுச்சேரியும் யூனியன் பிரதேசங்கள். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அந்த மாநிலங்களிலேயே கவர்னர்கள் அத்துமீறி செயல்படும் போது அம்மாநில முதல்-மந்திரிகள், பொதுமக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் மாநில அரசு கவர்னரின் நடவடிக்கைகளை மவுனமாக வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக முதல்-அமைச்சர் இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாநில சுயாட்சிக்கான அதிகாரங்கள் பறிபோக அனுமதிக்கக் கூடாது, கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். கவர்னரின் இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுகிறது என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாகும். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அ.தி. மு.க. அரசையும் முதல்- அமைச்சரையும் அவமதிக்கும் செயலாகும்.

பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் ஆளுனர்கள் முலம் இவ்வாறு நெருக்கடிகளை கொடுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.

கவர்னரே தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று சொல்ல முடியாது. மத்திய அரசின் தூண்டுதலால் தான் இவ்வாறு அவர் செயல்படுகிறார்.

எனவே மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கை விடுதலை சிறுத்தை வன்மையாக கண்டிக்கிறது. எனவேதான் கவர்னர் பதவிகள் ஒழிக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு கவர்னரின் இந்த போக்கை தொடக் கத்திலேயே கண்டிக்கா விட்டால் அறிவிக்கப்படாத குடியரசு தலைவர் ஆட்சி முறை நடைமுறைக்கு வந்து விடும்.

மத்திய அரசை எதிர்த்தால் ஆட்சி பறிபோகும் என்று முதல்-அமைச்சர் அச்சப்பட லாம். ஆனால் எதிர்க்கா மலேயே ஆட்சி அதிகாரம் பறிபோய் கொண்டிருக்கிறது என்பதை முதல்-அமைச்சர் உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கவர்னர் சுற்றுப்பயணம் செய்து மாவட்டம் மாவட்டமாக ஆய்வுக்கூட்டம் நடத்தி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை கூப்பிட்டு பேசுவதும் ஆர்.டி.ஓ. தாசில்தார் பி.டி.ஓ.வை அழைத்து பேசுவதும் சரியல்ல.

ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி ஒரு கவர்னர் செயல் படமுடியாது. அப்படி செய்ய மாட்டார் என நினைக்கிறேன். இனி எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்:-

கவர்னர் பன்வாரிலால் அசாம் மாநிலத்திலும் இதே வேலையைத்தான் செய்தார். ஆனால் அங்கு பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அவர் தமிழகத்திலும் அப்படி செயல்படுவார் என்று எதிர்பார்த்ததுதான்.

பா.ஜ.க.வின் நோக்கத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அவரின் நடவடிக்கை கவர்னர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர பிள்ளையார் சுழியாக நான் கருதுகிறேன். நல்ல எண்ணத்தில் அவர் செய்வதாக பார்க்க முடியாது.

குஜராத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பா.ஜ.க. வின் திட்டத்தை செயல்படுத்தும் ஆயத்த வேலையாக கவர்னரின் செயல்பாடு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment