டிரம்ப்க்கு ‘நடுவிரல்’ காட்டியதால் வேலையிழந்த பெண்ணுக்கு குவியும் நிதியுதவி

335 0

அமெரிக்கா அதிபர் டிரம்ப் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி அவமரியாதை செய்யும் விதமாக நடுவிரலை காட்டி பின்னர் வேலையிழந்த ஜூலிக்கு 70 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி திரட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாதுகாவலர்கள் புடைசூழ தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஜூலி ப்ரிஸ்க்மன் என்ற 50 வயது பெண், டிரம்ப்பை அவமரியாதை செய்யும் விதமாக தனது நடுவிரலை உயர்த்திக் காட்டினார். இதை பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்துவிட அது இணையதளத்தில் வைரலானது.

இதையடுத்து, கடந்த 6-ம் தேதி ஜூலி பணியாற்றிவந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து விலக்கியது. இதுபற்றித் தெரியவந்த இணையதள நிறுவனம் ஒன்று, ஜூலிக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி திரட்டும் பணியை ஆரம்பித்தது.

இதில் கலந்துகொண்ட சுமார் மூவாயிரம் பேர், ஐந்து டாலர்கள் முதல் 250 டாலர்கள் வரை நிதியுதவி செய்தனர். இதுவரை சுமார் 70 ஆயிரம் டாலர்கள் நிதி சேர்ந்துள்ளது.

“இந்தத் தொகை முழுவதும் நேரடியாக ஜூலிக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தத் தருணத்தில் நான் ஜூலிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அவரது தைரிய குணம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று புகழ்ந்திருக்கிறார் அந்த இணையதள உரிமையாளர்.

Leave a comment