ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பில் மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை ஆகியவற்றை வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால், கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நீடித்துக்கொண்டே வருகிறது.
ஏவுகணை சோதனைகளால் கடுப்படைந்த அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் வடகொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று கூறியபடியே உள்ளது. வடகொரியாவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவாக இருந்து வரும் நிலையில், இரு நாடுகளையும் வடகொரியாவிடம் இருந்து விலக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
அமெரிக்காவின் அதீத அழுத்தம் காரணமாக வடகொரியாவுடன் உள்ள வணிக உறவை சீனா மற்றும் ரஷ்யா குறைத்துக்கொண்டுள்ளன. இதற்கிடையே, வடகொரியா விவகாரத்தை தூதரக ரீதியில் பேசி தீர்க்க சீன அதிபர் ஜி ஜின்பிங் முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூத்த வெளியுறவு துறை அதிகாரி சோங் டாவ் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வடகொரியா செல்ல உள்ள சோங் டாவ் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர் பதற்றத்தை தணித்து சுமூக நிலையை கொண்டுவர முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவுக்கு எதிராக மேற்கண்ட நாடுகளை அணி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.