மேற்படிப்பு, வேலைவாய்ப்புக்கான ‘ஹெல்ப்லைன்’ வசதி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

257 0

பள்ளி மாணவர்கள் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் `ஹெல்ப்லைன்’ வசதி (இலவச தொடர்பு எண்) கொண்டுவரப்படும் என்று சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தினவிழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது கூறிய தாவது:

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மாணவர்களை தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளுக்குத் தயார்படுத் தும் வண்ணம் இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். சாதாரணமாக இதுபோன்ற பயிற்சியை தனியார் மையங்களில் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த இலவச பயிற்சி திட்டத்தில் சேர 73 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு புதிய புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளோம். மதுரையில் நூலக வசதிக்கு ரூ.6 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

ஹெல்ப்லைன் வசதி அறிமுகம்

பள்ளி மாணவர்கள் மேற் படிப்பு, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் ஹெல்ப்லைன் வசதியை தொடங்க உள்ளோம். வருகிற 24-ம் தேதி முதல்வரின் அனுமதியுடன் விரைவில் இவ்வசதி கொண்டுவரப்படும். பிளஸ் 2-வுக்கு பிறகு படிப்பில் என்னென்ன படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்பு படித்தால் என்னென்ன வேலை கிடைக்கும் போன்ற அனைத்து தகவல் களையும் இந்த பிரத்தியேக தொடர்பு எண்ணில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

வரைவு பாடத்திட்டம் நவம்பர் 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. புதிய பாடத்திட்டத்தில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், இந்த பாடத்திட்டமானது மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உகந்தவாறும் அமைந் திருக்கும்.

மாணவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஸ்மார்ட் கார்டு டிசம்பர் இறுதியில் அவர்களுக்கு வழங்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் தொடங்கவும், மத்திய அரசின் உதவியுடன் மேலும் 4 ஆயிரம் பள்ளிகளில் இந்த வகுப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஐஏஎஸ் பயிற்சி மையம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களில் 10 சதவீதம் பேர் அதாவது 12 லட்சம் பேர் `டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாடு உடையவர்களாக உள்ளனர். அந்த மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் மாதம் இறுதிக்குள் 32 மாவட்ட மைய நூலகங்களிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

சிறந்த நூலகர்களுக்கு விருது

குழந்தைகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அவர், 33 சிறந்த நூலகர்களுக்கு எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்த விருது பாராட்டுச்சான்று, ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது. அடுத்த ஆண்டு முதல் ரொக்கப் பரிசுத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அப்போது தெரிவித்தார்.

Leave a comment