கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. எனினும் அக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் பங்குதாரராக இருக்கும்வரையில் தாம் அதில் இணைந்துகொள்ளப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து
கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. குறித்த உணவுப் பொருட்களின் விலை குறைப்பினால் மாதம் ஒன்றுக்கு 1.5 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு செலவாவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் வருடம் ஒன்றுக்கு 18 பில்லியன் ரூபாவையே அரசாங்கம் செலவுசெய்ய வேண்டியுள்ளது.
எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது வரவு–செலவுத்திட்டத்தின் மூலம் மறைமுகமாக 649 பில்லியன் ரூபாவை வரி மூலம் அறவிடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் இடம்பெற்ற மோசடிகளினாலேயே இவ்வாறு வரி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.
எனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது முழுமையாக மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது. ஏனெனில் இறக்குமதி செய்யப்படும் புதிய மின்சாரக் கார்களுக்கே வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் புதிய மின்சாரக் கார்களை இலங்கையில் இறக்குமதி செய்யமுடியாது. எனவே இவ்வாறாக மக்களை ஏமாற்றும் வகையிலேயே வரவு–செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவால் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் ஆணைக்குழுவில் ஆஜராவதற்கு இன்னும் காலம் ஒதுக்கிக்கொடுக்கவில்லை. ஆகவே இவ்வாறான குற்றச்சாட்டுகள் உள்ள அரசாங்கத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அங்கம் வகிக்கிறது. அது தொடர்பில் நாம் கவலையடைகிறோம். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகளை மறைப்பதற்காகவே எம்மை இணைத்துக்கொள்வதற்கு அத்தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்றார்.