அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துவரும் வட கொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பு, அணு ஆயுத பரவலுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கைகள் ஆகியவற்றுக்கு மாறாக வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது. இதனை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில், சமீபத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தியது. இது தென்கொரியாவில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் ஜப்பானின் ஒரு சில பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனையாக பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 4 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி ஏப்ரல் முதல் ஜூன் வரை வடகொரியா 6 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. ஜூலை முதல் ஆகஸ்ட் வரையில் 4 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. எனவே வடகொரியா மீது ஐ.நா. உறுப்பு நாடுகள் பொருளாதார தடைகளை அமல்படுத்துவதற்கான முயற்சிகளை இருமடங்காக அதிகரிக்க வேண்டும்” ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.