அமெரிக்கா – வடகொரியா மோதல்: 3-ம் உலகப்போர் மூள 51% வாய்ப்புள்ளது – அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் கருத்து

1009 0

அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் போக்கு நீடிப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பானை அணு குண்டுகளை வீசி அழித்துவிடுவோம் என்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியாவுக்கு சீனாவும் ரஷ்யாவும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் ஓய்வு பெற்ற மூத்த தளபதி ரிச்சர்ட் ஏங்கல் கூறியிருப்பதாவது:

வரும் கோடை காலத்துக்கு முன்பாக அமெரிக்கா, வடகொரியா இடையே போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புகள் உள்ளன. இது 3-ம் உலகப்போராக வெடிக்கும் அபாயமும் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவத்தின் ஓய்வுபெற்ற மற்றொரு மூத்த தளபதி பேரி மெக்காப்ரே கூறியபோது, வடகொரியாவுடன் போர் மூண்டால் என்னென்ன விளைவு கள் ஏற்படும் என்பது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அநேகமாக இந்தப் பிரச்சினைக்கு வரும் கோடை காலத்துக்கு முன்பாக தீர்வு காணப்படும் என்றார்.

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க கடற்படையும் தென்கொரிய கடற்படையும் கொரிய தீபகற்ப கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ரெனால்டு ரீகன், தியோடர் ரூஸ்வெல்ட், நிமிட்ஸ் ஆகியவை உட்பட 11 போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன. இத்தனை போர்க்கப்பல்களை அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதனிடையே வடகொரிய அரசு சார்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமெரிக்கா மீது அணு ஆயுத போர் தொடுக்க தயங்கமாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment