எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும் என்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டுப் போராடிவரும் அவர்களது உறவுகளைச் சந்தித்த போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் இவ்வாறு கூறியிருந்தார்.
இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டடும், கைதுசெய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களது உறவுகள் 250 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து போராடிவருகின்றார்கள்.
அவ்வாறு 251 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளை கடந்த வெள்ளிக்கிழமை மாலை வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அப்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்..
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். இனிமேலும் அழுது புலம்பி பயனில்லை. எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நாம் எமது கோரிக்கையில் உறுதியாக நிற்பது அவசியம். அதன் மூலமே அனைத்துப்பிரச்சினைக்கும் உரிய நீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இறந்து விட்டார்கள் என்றால் அதனால் மனதில் ஏறபடும் துக்கம் காலப்போக்கில் ஆறிவிடும். ஆனால் இருக்கிறார்களோ இல்லையோ என்பது கூடத் தெரியாது நாம் படும் துயரம் கறையான் அரித்தது போன்று பெரும் மனவேதனையை தந்துகொண்டிருக்கின்றது. இந்தப்பிரச்சினையால் நானும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் உங்கள் வலிகளையும் வேதனைகளையும் என்னால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடிகிறது.
எமது கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சர்வதேசம் மற்றும் அரச தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சமரசங்களை ஏற்காது நாம் தொடர்டந்தும் உறுதியாக இருப்பதன் மூலமே எமது பிரச்சினைகள் குறித்து பேசியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளோம். இல்லையென்றால் எமது விடயம் எப்போதோ கைகழுவி விடப்பட்டிருக்கும்.
என்னைச்சந்திக்கும் சர்வதேச பிரதிநிதிகளிடம் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டியதன் கட்டாயத்தினை எடுத்துக்கூறுவதுடன் அவர்களுக்கான நீதி கிடைக்கும் வரை உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம் என்று அழுத்தம்திருத்தமாகவும் கூறிவருகின்றேன். எனது இந்த இறுக்கமான நிலை சமரசம் செய்யும் நோக்கில் வரும் பிர-திநிதிகளுக்கு ஏமாற்றமாக இருப்பதால் சிலர் என்னைச்சந்திப்பதை தவிர்க்கின்றார்கள்.
எது எப்படி இருப்பினும் எமது கண்முன்னே இலங்கை இராணுவத்திடம் நாம் கையளித்து காணாமல் ஆக்கபட்ட, கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்தும் அறவழி நின்று போராடுவோம். அதன் மூலமே அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளிடம் மேலம் தெரிவித்திருந்தார்.