ஆசியான் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மற்ற நாடுகளின் தலைவர்களுடன் உரிய முறையில் கைகுலுக்க மறந்ததால் மற்றவர்களுக்கு தர்மசங்டம் ஏற்பட்டது.
தென் கிழக்கு ஆசிய நாடுகள் இணைந்துள்ள ஆசியான் அமைப்பின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதனுடன் ஆசியான் அமைப்பின் 50-ம் ஆண்டு விழா, கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆசியான் நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன பிரதமர் லீ கெ கியாங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மாநாடு தொடக்க விழாவில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஆசியான் மாநாட்டு வழக்கப்படி எதிரெதிரே கைகொடுத்து கைகுலுக்குவது வழக்கம்.
அதன்படி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கைகுலுக்கினர். வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே ஆகியோருக்கு நடுவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நின்றார். தலைவர்கள் கைகுலுக்கத் தொடங்கியவுடன், ட்ரம்ப் திடீரென, வியட்நாம் பிரதமர் நிகியென் சுவானுக்கு இரண்டு கையையும் கொடுத்து கைகுலுக்கினார். இதனால் ட்ரம்புக்கு இடது பகுதியில் நின்ற வரிசை அறுபட்டது. பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே செய்வதறியாமல் திகைத்தார்.
அதற்குகள் புகைப்பட கலைஞர்கள் அதை படம் எடுத்துத் தள்ளினர். சற்று நேரம் கழித்து இதை உணர்ந்து கொண்ட ட்ரம்ப் மறுபுறம் திரும்பி மற்றொரு கையை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டேவிடமும் கொடுத்து கைகுலுக்கி நிலைமையை சமாளித்தார்.