புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களாக பாஜகவினர் மூவர் நியமனத்தை நிராகரித்து சபாநாயகர் வைத்திலிங்கம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ளலாம். இதுவரை மாநில அரசு பரிந்துரை செய்பவர்களையே மத்திய அரசு நியமித்து வந்தது. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசு பரிந்துரைக்காமலேயே பாஜகவினர் மூன்றுபேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துள்ளது.
சபாநாயகர் வைத்திலிங்கம் இருக்கும்போது அவர்களுக்கு ஆளுநர் கிரண்பேடியே ராஜ்நிவாஸ் கதவுகளை மூடி, ரகசியமாக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும் எம்எல்ஏவுமான லட்சுமி நாராயணன் இந்த நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதனை அடுத்து பாஜகவினர் சாமிநாதன், சங்கர்,செல்வகணபதி ஆகிய மூன்றுபேரும் தங்களுக்கு அவையில் இருக்கையும் சட்டப்பேரவையில் அலுவலகமும் அமைத்துத்தர வேண்டும் என்று சபாநாயகர் வைத்திலிங்கத்தையும் சட்டமன்றச் செயலரையும் சந்தித்து மனு அளித்தனர்.
ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் இதுவரை மூன்று நியமன எம்எல்ஏக்களையும் அங்கீகரிக்கவில்லை. அதையடுத்து அமெரிக்காவுக்கு சபாநாயகர் சென்று விட்டார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் எம்எல்ஏ விவகாரம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தற்போது முடிவு எடுக்க இயலாது என்று பதில் அளித்ததாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறும். குறுகிய காலம் கொண்ட இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சபாநாயகர் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறக் காரணம் சட்டப்பேரவைக்குள் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட பாஜகவினர் அனுமதிக்கப்படுவார்களா என்பதுதான்.
சபாநாயகர் முடிவே இறுதியானது என்பதால் அவர் அனுமதிப்பாரா அல்லது நிராகரிப்பாரா என்றும் கேள்வி எழுந்தது.
சட்டப்பேரவை கூடும்போது நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்குள் நுழையவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் இன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில் மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் நிராகரித்து உள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவைச்செயலர் வின்சென்ட் ராயர் மூன்று நியமன எம்எல்ஏக்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “நியமன எம்எல்ஏக்களை நியமிக்கும் அதிகாரிகமுடையோரிடமிருந்து உரிய உத்தரவு வரவில்லை. அதனால் இந்நியமனம் நிராகரிக்கப்படுகிறது. ஆளுநர் செய்து வைத்த பதவிப் பிரமாணமும் ஏற்கத்தக்கதல்ல. சபாநாயகர் உத்தரவுப்படி இக்கடிதம் அனுப்பப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.