ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு கானல் நீராகும்: நெல்லை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் உறுதி

428 0

அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவு, கானல் நீராகும் என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அரசு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ரூ.734 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து பிறழாமல் கட்சியையும், ஆட்சியையும் நடத்துகிறோம். எங்களை தலைவர்களாக நினைக்கவில்லை, தொண்டர்களாக இருந்தே பணியாற்றுகிறோம்.

அதிமுக 100 ஆண்டுகள் கடந்தும் இருக்கும் என்ற ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்ற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அதிமுக ஆட்சியின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

கடந்த வறட்சியின்போது தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொண்டோம். தற்போதைய வெள்ளத்தின்போதும் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் மேற்கொண்டனர்.

நல்லது செய்தாலும் திமுக குறை சொல்லிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இத்தகைய தடைகளை தகர்த்தெறிவோம். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் மகத்தான திட்டங்களை தொடங்கி வைக்கிறோம். மக்கள் மீது அக்கறை இருந்தால் குறைகூறுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்.

இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும், இயக்கத்தை உடைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கனவு காணுகிறார். அவரது கனவு கானல் நீராகும். இது மக்களுக்கான இயக்கம். இங்கு நடப்பது திமுகவைப்போல் குடும்ப ஆட்சியல்ல. 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுக எஃகு கோட்டை. இதில் ஒரு கல்லையும் அசைக்க முடியாது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.100 கோடியில் 1,519 ஏரிகளை தூர்வாரியிருக்கிறோம். அடுத்தகட்டமாக ரூ.300 கோடியில் ஆயிரக்கணக்கான ஏரிகளை தூர்வார உள்ளோம். ஏரிகளை தூர்வாரியதால் தற்போதைய மழையில் 30 சதவீதம் நீரை சேமித்திருக்கிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. இந்த ஆண்டு ரூ.350 கோடி இத்திட்டத்துக்கு ஒதுக்கப்படும் என்று முதல்வர் பேசினார்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a comment