வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ குண்டன், குள்ளன் என்று அழைக்கமாட்டேன் – டிரம்ப்

358 0

முதியவர், பைத்தியகாரன் என்று தன்னை விமர்சித்த கிம் ஜாங் உன்-ஐ குண்டன் என்றும் குள்ளன் என்றும் நான் ஒருபோதும் அழைக்கமாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை வடகொரியாவில் சோதனை செய்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இது அந்த நாடு மட்டுமல்லாமல் அண்டைய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் வடகொரிய அதிபரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இதனால் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கும் இடையே கடந்த சில மாதங்கள் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஐ.நா. சபையில் கூட்டத் தொடரில் டிரம்ப் பேசும்போது ஏவுகணை மனிதன் கிம் ஜாங் உன் ஆட்சிக்கு முடிவு கட்ட ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் தலைவர் ஒரு வயதான முதியவர், குரைக்கும் நாய் கடிக்காது என்று கிம் ஜாங் தனது டுவிட்டரில் கூறினார். மேலும் வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநலம் சரியில்லாதவர் என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியதாவது, “வடகொரியா அதிபர் தனது  செயல்பாடுகளின் மூலம் தன்நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இது தான் அந்த நாட்டில் நடக்கபோகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அவரை சோதிப்போம்”, என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று டுவிட்டரில் கிம் ஜாங்கை டிரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார். அதில் தன்னை முதியவர் என்று கிம் கூறினாலும் நான் அவரை குள்ளன் மற்றும் குண்டன் என்று கூறமாட்டேன். அவருடன் நட்புறவு ஏற்பட முயற்சிப்பது மிகவும் கடினம். ஆனால் இது ஒரு நாள் ஈடேறும், என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a comment