உணவுப் பொருட்களில் அதிக கலப்படம் செய்யப்படுகிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ குற்றம் சாட்டினார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மத்திய வேளாண் விவசாயிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனைத் துறை சார்பில் தேசிய அக்மார்க் கண்காட்சி நேற்று தொடங்கியது.
இக்கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது:
சில பொருட்களில் அக்மார்க் முத்திரை இருந்தாலும் கலப்படம் உள்ளது. அதுபோன்ற தவறுகளை செய்யும் நிறுவனத்தின் பொருட்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
கூட்டுறவுத் துறையில் தரமான மஞ்சள் தூள் ஈரோட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முன்பு மாடுகளை வைத்து சுத்தமான எண்ணெயை செக்கில் தயாரித்ததை போல, தற்போது கூட்டுறவுத் துறையிலும் இயந்திரங்கள் மூலம் தரமான எண்ணெய் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் 11 இடங்களில்தான் அக்மார்க் தரச்சான்று மையங்கள் உள்ளன. இதை மாவட்டம்தோறும் கொண்டுவர மத்திய அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் தவறு செய்பவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். உணவுப்பொருட்களில் பல வகைகளில் கலப்படம் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. அதனை உணவு பாதுகாப்புத்துறை மற்றும் அக்மார்க் நிறுவனங்கள் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். என்றார்..
வேளாண் விற்பனைத் துறை முதன்மைச் செயலர் ஆணையர் சுன்சொங்கம் ஜாடக் சிரு, மத்திய வேளாண் விற்பனைத் துறை இணைச் செயலர் ஸ்வைன், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ், ஆர்.கோபாலகிருஷ்ணன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.