அன்னை தெரசாவால் பைலட்டாக உயர்ந்து நிற்கும் இளைஞர்

370 0

polio_2988426fகொல்கத்தாவில், 38 ஆண்டுகளுக்கு முன்பு போலியோ பாதிப்பு காரணமாக பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை, அன்னை தெரசாவால் மீட்டு வளர்க்கப்பட்டு, தற்போது, லண்டனைச் சேர்ந்த வர்த்தக விமான பைலட்டாக உயர்ந்து நிற்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

சிறு வயதிலிருந்து இப்போதும் ஊன்றுகோல் துணையுடனே நடக்கும் கௌதம் லெவிஸுக்கு தற்போது, 39 வயது.

போலியோ பாதிப்பு காரணமாக, ஒரு வயதிலேயே பெற்றோர் இவரை கைவிட்டனர்.

ஹவுரா வீதியில் ஆதரவற்று கிடந்த அவரை, அன்னை தெரசா மீட்டு, குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.

பின்னர், 3வது வயது முதல், அன்னை தெரசாவின் காப்பகத்தில் வளர்க்கப்பட்டார்.

7வது வயதில், காப்பகத்துக்கு வந்த பிரிட்டனைச் சேர்ந்த அணு சக்தி விஞ்ஞானி ஒருவர் இவரை தத்தெடுத்துக்கொண்டார்.

அதன் பிறகு லண்டனில் வளர்ந்த லெவிஸ், தற்போது வர்த்தக விமான பைலட்டாக உயர்ந்துள்ளார்.

அதோடு, லண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்கான பைலட் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார்.

சர்வதேச போலியோ ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான யுனெஸ்கோ தூதராகவும் லெவிஸ் பணியாற்றி வருகிறார்.

தவிர, புகைப்படக் கலைஞர், இசையமைப்பாளர், குறும்பட இயக்குநர் என பன்முகத் திறமையுடன் லெவிஸ் சிறந்து விளங்குகிறார்.

தனது இன்றைய நிலைக்கு காரணமான அன்னை தெரசாவின் பிறந்த நாளில் (நேற்று) அவருக்கு மரியாதை செலுத்த கொல்கத்தா வந்திருந்தார்.

எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, வத்தகானில் இருந்து லெவிஸுக்கு அழைப்பு வந்துள்ளது.

எனினும், அதை தவிர்ததுவிட்டு, அன்னையுடன் தான் வளர்ந்த இடத்தில் அவரின் நினைவுகளை போற்றும் வகையில் புகைப்பட கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிகளை லெவிஸ் நடத்தி வருகிறார்.

கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் அன்னை தெரசா சர்வதேச திரைப்பட திருவிழாவில், லெவிஸ் தயாரித்துள்ள ‘அன்னை தெரசாவும் நானும்’ என்ற 55 நிமிட குறும் படம் திரையிடப்படுகிறது.

‘அன்னை தெரசாவை நான் எனது 2வது தாய் என்றே அழைப்பேன்.

தெருவில் கிடந்த என்னை மீட்டு காப்பாற்றிய அவரையும், உடன் இருந்த சகோதரிகளையும் கொண்டாடி மகிழும் வகையில் இந்த குறும் படத்தை தயாரித்துள்ளேன்’ என, லெவிஸ் தெரிவித்துள்ளார்.