காவிரி நீரை திறந்துவிடக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணை செப்.2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

368 0

cauvery_2410790fகாவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிடக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் செப்டம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் ஆண்டுதோறும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை அளிக்க வேண்டும்.

ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததாக கூறி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறக்க மறுத்துவருகிறது. எனவே கடந்த 22ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை முறைப்படி திறந்து விடுவதில்லை.

நடப்பு நீர்ப்பாசன பருவ ஆண்டின் (2016-17) ஆகஸ்ட் 19ஆம் திகதிக்குள் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு 74.645 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும்.

ஆனால் 24.593 டிஎம்சி நீரை மட்டுமே பிலிகுண்டு அளவை நிலையத்தில் இருந்து கர்நாடகா திறந்து விட்டுள்ளது.

உரிய நீர் திறக்கப்படாததால் காவிரி நீரை நம்பி தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.

இதை நம்பி வாழும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி நீரை உடனடியாக திறந்து விட, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இதே வேளையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், வரும் செப்டம்பர் 2ஆம் திகதி இம்மனுவை விசாரிப்பதாகக் கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.