ராணுவம் மூலம் சிரியாவில் தீர்வு காண முடியாது – டிரம்ப், புதின் கூட்டாக அறிவிப்பு

332 0

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போருக்கு ராணுவ மூலம் தீர்வு காணமுடியாது என அமெரிக்காவும் ரஷ்யாவும் கூட்டு முடிவு எடுத்துள்ளன.

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு வியாட்நாமில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்பும், புதினும் சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போருக்கு ராணுவ மூலம் தீர்வு காணமுடியாது என கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை கவிழ்க்க கிளர்ச்சியாளர்கள் கடந்த 6 ஆண்டுளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இதனால், சிரியாவில் நடக்கும் சண்டையில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவை உள்ளன. அதே நேரம், அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா, ஈரான் போன்றவை ஆதரவளித்து வருகின்றன.

மேலும், கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக சிரியா ராணுவத்துடன் இணைந்து ரஷ்ய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் கிளர்ச்சிப் படைகள் தங்கியிருந்த முகாம் மீது சிரியா விமானப்படை ரசாயன வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதை கடுமையாக கண்டித்த அமெரிக்கா, ரசாயன வெடிகுண்டு தாக்குதல் நடத்திய விமானப்படை தளத்தை ஏவுகணைகள் வீசி அழித்தது. இதனால், சிரியா விவகாரத்தில் அமெரிக்கா – ரஷ்யா இடையிலான மோதல் மேலும் வலுத்தது.

இந்நிலையில், வியட்நாமில் உள்ள தனாங் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், ரஷ்ய அதிபர் புடினும் கலந்து கொண்டனர். அப்போது, சிரியா பற்றி இரு தலைவர்களும் சந்தித்துப் பேசி, கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அதில், ‘சிரியா பிரச்னைக்கு ராணுவம் மூலம் தீர்வு காணமுடியாது என்று 2 அதிபர்களும் முடிவு செய்துள்ளனர். சிரியாவின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, போன்றவைக்கு மதிப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை கூட்டாக இணைந்து ஒழிக்கவும் முடிவு செய்துள்ளனர். சிரியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கவும் வலியுறுத்தப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a comment