சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி – வைகோ கண்டனம்

397 0

vaiko_2854193fசிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் வாழ்வாதாரமாக உள்ள சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் உற்பத்தி திட்டத்துக்கான மதிப்பீட்டு நிபுணர் குழு தொழில்நுட்ப இசைவு அளித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து தமிழக அரசுக்கு கடந்த மே 4ஆம் திகதி கேரள நீர்ப்பாசனத் துறை கடிதம் எழுதியதாகவும், அதற்கு தமிழகம் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இநத நிலையில் கேரளத்தின் கோரிக்கையை ஏற்று அணை கட்ட மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் கேரளம் அணை கட்ட முயற்சித்தது.

தமிழக அரசின் எதிர்ப்பால் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.

இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதி நீர்ப் பிரச்சினையில் தமிழக அரசின் கருத்தைப் பெறாமலேயே கேரளத்துக்கு ஆதரவாக நரேந்திர மோடி அரசு செயல்பட்டு இருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழகத்தை வஞ்சிப்பதில் அண்டை மாநிலங்களுக்கு துணைபோகும் மத்திய அரசின் துரோகத்தை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.

இப்பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

கொங்கு மண்டலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.